தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

26 அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்து விநியோகம்: அதிர்ச்சி அறிக்கை

1 mins read
60885a12-fd43-4f0b-86f6-e5bcb1c8da62
மாதிரிப்படம்: - பிக்சபே

திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலத்தில் 26 அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குக் காலாவதியான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டதாகத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி அலுவலக (சிஏஜி) அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 2016-2022 காலகட்டத்தில் இது நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

மொத்தம் ரூ.3.75 கோடி மதிப்பிலான தரம் குறைந்த மருந்துகள் 483 மருத்துவமனைகளில் வழங்கப்பட்டன என்றும் நிறுத்தும்படி உத்தரவிட்ட பிறகும் ரூ.11.69 லட்சம் மதிப்பிலான மருந்துகள் 148 மருத்துவமனைகளில் விநியோகிக்கப்பட்டன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

அத்துடன், காலாவதியான மருந்துகளில் வேதிமாற்றம் நிகழலாம் என்பதால் நோயாளிகளின் உயிரை ஆபத்தில் தள்ளியதாகக் கேரள மருத்துவச் சேவைகள் கழகத்தை சிஏஜி சாடியுள்ளது.

46 வெவ்வேறு மருந்து வகைகளில் தரச் சோதனை நடத்தப்படவில்லை என்றும் 14 நிறுவனங்கள் வழங்கியவற்றில் ஒரு மருந்துகூட பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

இதற்குக் காரணங்களாக வேதியியலாளர்கள் பற்றாக்குறை, மின்தடை, இணையச் சேவைத் தடை உள்ளிட்டவற்றை கேரள மருத்துவச் சேவைகள் கழகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், சிஏஜி அவற்றை ஏற்க மறுத்து, வன்மையாகச் சாடியுள்ளது.

குறிப்புச் சொற்கள்