புதுடெல்லியில் வெடிப்புச் சம்பவம்; ஒருவர் காயம்

1 mins read
ab0bb600-ec63-4346-85d7-ba4401a55bec
வியாழக்கிழமை (நவம்பர் 28) காலை 11.48 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் ரோகினியில் உள்ள பிரசாந்த் விகார் பகுதியில் அமைந்துள்ள ‘பிவிஆர் மல்டிபிளெக்ஸ்’ திரையரங்குக்கு அருகே உள்ள இனிப்பகத்துக்கு எதிரே மர்மமான முறையில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். வியாழக்கிழமை (நவம்பர் 28) காலை 11.48 மணிக்கு இச்சம்பவம் நடந்தது.

வெடிப்புச் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மூன்று சக்கர வாகனத்தின் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததும் நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். வெடிகுண்டு கண்டறியும் குழு, காவல்துறையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த இடம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.

அக்டோபர் 26ஆம் தேதி இதே பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படைப் பள்ளி அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அப்பள்ளியின் சுற்றுச்சுவர், அருகில் உள்ள கடைகள் சேதம் அடைந்தன. நல்வாய்ப்பாக யாரும் காயம் அடையவில்லை. இந்த வெடிகுண்டு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான விசாரணையில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், வியாழக்கிழமை நடந்த சம்பவம் புதுடெல்லி வாசிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்