திருச்சூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 13 பேர் உயிரிழப்பு

திருச்சூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 13 பேர் உயிரிழப்பு

2 mins read
f18184c9-7e07-4fd4-bd19-908d195f6ca3
ஏராளமான பட்டாசுகள் ஒரே வேளையில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியதில், பல ஊழியர்கள் காயமடைந்தனர். - படம்: தி ஃபெடரல்

திருச்சூர்: பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் மாண்டுபோயினர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தத் துயரச் சம்பவம் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்​டத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) மாலை நிகழ்ந்துள்ளது.

அங்குள்ள முண்​டத்​தி​கோட் பகு​தி​யில் இயங்கிவரும் பட்டாசுத் தொழிற்சாலையில் 65க்கும் மேற்பட்ட ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை பணியில் இருந்தனர். அப்போது அந்த ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறின.

திருச்சூரில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அப்போது பல்வேறு வாணவேடிக்கைகள் நடத்தப்படும்.

இந்த விழாவுக்கான பட்டாசுகள்தான் முண்​டத்​தி​கோட் தொழிற்​சாலையில் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், விபத்து ஏற்பட்டதும் ஆலையில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம்பிடித்தனர்.

எனினும், வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான பட்டாசுகள் ஒரே வேளையில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியதில், பல ஊழியர்கள் காயமடைந்தனர்.

விபத்தில் 13 ஊழியர்கள் உடல் சிதறி மாண்டுபோயினர். காயமடைந்த அனைவரும் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக திருச்சூர் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் எனத் தமது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வெடிவிபத்து தொடர்பாக நீதிபதி சி.என். ராமச்சந்திரன் நாயர் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கேரள முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.14 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்