புதுடெல்லி: இந்தியாவில் சிறிய அளவிலான ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் நோக்கில், ரூ.10,000 வரையிலான ஏற்றுமதிப் பொருள்களுக்கான விதிமுறைகளைத் தளர்த்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்கான புதிய பரிந்துரையை இந்திய வெளிநாட்டு வணிகப் பொது இயக்ககம் முன்வைத்துள்ளது. அதன்படி, ரூ.10,000 வரை மதிப்புடைய ஏற்றுமதிப் பொருள்களுக்கு இனி ‘பதிவு, உறுப்பினர் சான்றிதழ்’ பெற வேண்டிய கட்டாயம் இருக்காது.
இந்த நடவடிக்கை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், கைவினைஞர்கள் மற்றும் இணையவழி வர்த்தகத்தில் ஈடுபடும் வணிகர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். குறிப்பாக, அஞ்சலகங்கள், விரைவு அஞ்சல் சேவைகள் வழியாக வெளிநாடுகளுக்குப் பொருள்களை அனுப்பும் சிறிய ஏற்றுமதியாளர்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.
தற்போதுள்ள நடைமுறைப்படி, வெளிநாட்டு வணிகக் கொள்கையின்கீழ் சலுகைகளைப் பெறவும் ஏற்றுமதி அனுமதிகளைப் பெறவும் வணிகர்கள் பதிவு, உறுப்பினர் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்றுமதி மேம்பாட்டு மன்றங்கள் மூலம் அச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அவ்விதியைத் தளர்த்துவதன்மூலம் சிறு வணிகர்கள் மீதான நிர்வாகச் சுமையைக் குறைக்கவும் இணையம் வழியிலான ஏற்றுமதியை எளிமைப்படுத்தவும் அரசு இலக்கு வகுத்துள்ளது. இருப்பினும், தடைசெய்யப்பட்ட பொருள்களின் ஏற்றுமதிக்கு இந்த விலக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வணிகக் கொள்கை 2023ல் இந்தத் திருத்தத்தைக் கொண்டுவருவது தொடர்பில் ஏற்றுமதியாளர்களிடமும் வணிக அமைப்புகளிடமும் கருத்து கோரப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க 10 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

