ராய்ப்பூர்: ஒரு பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவது பாலியல் குற்றமாகக் கருதப்பட மாட்டாது என சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பாலியல் உள்நோக்கம் இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டாலன்றி, ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ (ஐ லவ் யூ) என்று ஒருவர் கூறுவது பாலியல் துன்புறுத்தல் என வகைப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஒரு வழக்கில் மேற்கோள் காட்டியுள்ளது சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம்.
வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்றம், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம், குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் ஒரேயொரு முறை, ‘ஐ லவ் யூ’ என்று கூறியதை புகார் அளித்தவரே வாக்குமூலம் அளித்ததைச் சுட்டிக்காட்டியது.
“குற்றஞ்சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்ட பெண்ணை வேறு எந்த வகையிலும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தவோ பின்தொடரவோ இல்லை. அவருக்கு ஏதேனும் உள்நோக்கம் இருந்ததா என்பதும் நிரூபிக்கப்படவில்லை.
“எனவே, இதை பாலியல் துன்புறுத்தல் எனக் கருத முடியாது,” என்று உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் அகர்வால் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு ‘மைனர்’ பெண்ணால் பதிவு செய்யப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. பின்னர் கடந்த 2022ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட நபர் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தை அணுகியது.