புதுடெல்லி: பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறப்பதற்கான தடையை இந்திய அரசாங்கம் அக்டோபர் 24ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், 26 பேர் மாண்டனர். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர்ச் சூழல் நிலவியது.
‘ஆப்பரேசன் சிந்தூர்’ என்ற பெயரில், பயங்கரவாதிகளைக் குறிவைத்து இந்திய அரசாங்கம் தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சிந்துநதி நீர் நிறுத்தம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
அதன் தொடர்ச்சியாக இந்திய வான்வெளியில் பறப்பதற்குப் பாகிஸ்தான் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
முதலில், ஏப்ரல் 30ஆம் தேதி தொடங்கி மே 24ஆம் தேதிவரை விதிக்கப்பட்டிருந்த தடை பின்னர், செப்டம்பர் 24ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகத் தற்போது அக்டோபர் 24ஆம் தேதிவரை அத்தடையை நீட்டித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.