சென்னை: கீழடியில் வாழ்ந்த தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தனர் என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்பட்டு வருவதாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழா் நாகரிகம் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த கீழடி அறிக்கையை மத்திய அரசு இதற்குப் பின்னராவது வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனத்தில் எழும் முக்கிய கேள்வி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளைக் கொண்டு அறிவியல்பூர்வமாக 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்களை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்.
“பிரிட்டனில் உள்ள ஆய்வகத்தில் 3டி முறையில் படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு முகங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
“80% அறிவியல், 20% கலைத் தன்மையைப் பயன்படுத்தி இவை வடிவமைக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“கொந்தகை எனப்படும் கீழடி அருகிலுள்ள பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மண்டை ஓட்டிலிருந்து இம்முகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன,” என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முக உருவாக்க நிபுணரான பேராசிரியர் கேரோலைன் வில்கின்சன் கூறுகையில், “கீழடி அருகே கொந்தகையில் கிடைத்த எலும்புக்கூடு, நரம்பு, தசை மாதிரிகள் ஆகியவற்றின் அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு கணினி உதவியுடன் இந்த முகங்களை உருவாக்கியுள்ளோம்.
“முகத்தின் மேற்பகுதி அங்கு கிடைத்த தொன்மங்களின் அடிப்படையிலும், கீழே உள்ள தாடை போன்ற பகுதிகள் தொழில்நுட்ப உதவியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
“முக வடிவமைப்பில் தற்போதைய தென் இந்தியர்களின் படங்கள், மருத்துவத் தரவுகளைக் கொண்டு தோல், கண்கள், முடி போன்றவற்றின் நிறமும் அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளன,” என்றார்.