கொச்சி: கேரளக் காவல்துறைக்கு பெரும்பாவூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் போலியான ஆதார் அட்டை தயாரிக்கும் நிலையம் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறை அதிகாரிகள் தீவிரச் சோதனை நடத்தினர்.
அப்போது பெரும்பாவூரின் தனியார் பேருந்து நிலையம் அருகே இருக்கும் சிறிய கடைத்தொகுதி வளாகத்தின் தரைத்தளத்தில் உள்ள கைப்பேசிக் கடையில் சட்டவிரோத நடவடிக்கை நடப்பதை உறுதி செய்தனர்.
அதன்பின்னர் அக்கடையை முற்றுகையிட்ட அதிகாரிகள், அங்குப் பல போலியான ஆதார் அட்டைகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் அங்கிருந்த மடிக்கணினிகள், கைப்பேசிகள், அச்சு இயந்திரம், 50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.
அந்தப் போலி நிறுவனத்தை நடத்தி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஜுல் இஸ்லாம் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.