போபால்: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலக் காவலர் தேர்வில் போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தியது தொடர்பில் 21 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் 22 பேர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐந்து பேர் போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி தேர்வு எழுதியதைத் தேர்வுக்குழு அறிய நேர்ந்ததை அடுத்து, அம்மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
இதுகுறித்து விவிரித்த சட்ட, ஒழுங்குத் தலைமை ஆய்வாளர் அன்ஷுமன் சிங், “காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 2023ஆம் ஆண்டில் நடைபெற்றது. எழுத்துத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் போபாலில் 2024ஆம் ஆண்டு உடற்தகுதிச் சோதனை நடத்தப்பட்டது.
“அப்போது, ஐந்து பேர் போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி தேர்வெழுதியது தெரியவந்தது. விசாரணையில், வேறு பல மாவட்டங்களிலும் அத்தகைய மோசடி இடம்பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது,” என்று கூறினார்.
அவற்றின் அடிப்படையில், 21 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றும் 22 பேர்மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
அவர்களுள் போலி ஆதார் அட்டைகளைத் தயாரித்துக் கொடுத்தவர்களும் அடங்குவர்.
இவ்விவகாரத்தில் குற்றமிழைத்தோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
“தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அநீதி இழைக்கும் இத்தகைய குற்றச்செயல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது,” என்று எக்ஸ் ஊடகம் வழியாக அவர் பதிவிட்டுள்ளார்.