உ.பி.யில் திருமண இணையத்தளம் மூலம் 25 பெண்களை ஏமாற்றிய போலி ராணுவ அதிகாரி கைது

2 mins read
9ba928ae-7865-4729-90f0-46115c7e7243
25 பெண்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் பணம் பறித்த போலி ராணுவ அதிகாரியான தயாளி உப்பல், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.   - படம்: ஊடகம்

புதுடெல்லி: திருமண இணையத் தளம் மூலம் தெலுங்கானா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த 25 பெண்களை ஏமாற்றி, ரூ.40 லட்சம் பணம் பறித்த போலி ராணுவ அதிகாரி உ.பி.யில் கைது செய்யப்பட்டார்.

தெலுங்கானாவின் பெத்தப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தயாளி உப்பல். இவர், மத்திய அரசின் பல்வேறு போலி அடையாள அட்டைகளுடன் ஆறாண்டுகளாகப் பெண்களை ஏமாற்றி வந்துள்ளார்.

மணமகள் தேவை என திருமண இணையத் தளத்தில் தனது விவரங்களைப் பதிவிட்டு பெண் பார்க்கும் படலத்தைத் தொடர்ந்துள்ளார்.

இந்த ஏமாற்று வேலைக்கு ராணுவம், தேசியப் புலனாய்வு நிறுவனம், ஜம்மு-காஷ்மீர் காவல் துறை, மத்தியக் காவல் படையான சிஆர்பிஎப் உள்ளிட்ட போலி அடையாள அட்டைகளையும் அவர் பயன்படுத்தி உள்ளார்.

தன்னை ஒரு ராணுவ அதிகாரியாக அறிமுகப்படுத்திக்கொண்டு மூன்று பெண்களை ஏமாற்றி அவர்களைத் திருமணம் செய்துள்ள விவரமும் இப்போது தெரியவந்துள்ளது.

இந்த மூவரில் உபியின் சந்தவுலி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தற்போது வாரணாசியில் வசிக்கிறார்.

இவர் அளித்த புகாரின் அடிப்படையில், தயாளி உப்பலை ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வாரணாசியின் துணை காவல் ஆணையர் டி.சரவணன் தேடி வந்தார்.

இந்நிலையில், சந்தேகப்படும் விதத்தில் வாரணாசியில் கைதான ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்தான் தயாளி உப்பல் என அடையாளம் தெரிந்தது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ ஊடகத்திடம் வாரணாசி துணை காவல் ஆணையர் சரவணன் கூறும்போது, “குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து ராணுவச் சீருடைகள் மீட்கப்பட்டுள்ளன. அவரிடம் மேஜர் அமித், மேஜர் ஜோசப் என்ற போலி பேட்ஜ்களும், அடையாள அட்டைகளும் இருந்தன.

“பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை ஒரு ராணுவ அதிகாரி என்று கூறி திருமணம் செய்து கொண்டது நிரூபணமாகி உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தயாளி உப்பல் கூறும்போது, “வங்கியில் பணியாற்றிய அப்பெண்ணை நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு, அவரிடமிருந்து ரூ.6 லட்சம் வாங்கியுள்ளேன்.

“இதுபோல், டெல்லி, பஞ்சாப், உத்தரகாண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 25 பெண்களிடம் ஏறக்குறைய ரூ.40 லட்சம் பணம் வாங்கியுள்ளேன். இணையத்தில் ராணுவ அதிகாரிகளின் அடையாள அட்டைகளைத் தேடி, அச்சுப்பொறியின் உதவியுடன் போலி அடையாள அட்டைகளை நானே தயாரித்துக்கொண்டேன்.

“யாரும் சந்தேகப்படாத விதத்தில் ஒரு கள்ளத் துப்பாக்கியையும் வாங்கி வைத்திருந்தேன். என் குற்றத்தை ஒப்புக்கொள்வதுடன் நான் செய்த தவறுகளுக்கு அனைவரிடமும் நான் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்