ஆக்ரா: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் போலி மருந்துகளைத் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் தொடர்பில் பத்துப் பேர் கைதுசெய்யப்பட்டனர். அங்கிருந்து ரூ.8 கோடி மதிப்பிலான போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டன.
உத்தரப் பிரதேச மருந்துத் துறையும் காவல்துறையும் இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டன.
அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்த அந்த ஆலையில் மிகப் பெரிய அளவில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு வந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விஜய் கோயல் என்ற ஆடவர்தான் இதற்கு மூளையாகச் செயல்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. இதற்கு முன்னரும் இதுபோன்ற குற்றங்களுக்காக அவர் பலமுறை சிறை சென்றதாகக் காவல்துறை ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
ஒவ்வொருமுறை சிறையிலிருந்து விடுதலையான பின்னரும் மீண்டும் அவர் அதே தொழிலைச் செய்துவந்ததாகச் சொல்லப்படுகிறது.
அதிரடிச் சோதனையின்போது மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள், இயந்திரங்கள், விற்பனைக்காகக் கடைகளுக்கு வழங்குவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த பேரளவிலான போலி மருந்துகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, போலி மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் எங்கிருந்து வந்தன என்பதையும் அவற்றை விற்கும் கும்பலையும் கண்டறியும் பணியை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
கைதுசெய்யப்பட்ட பத்துப் பேரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

