காலாவதியான உணவுப் பொருள்கள்மீது போலி முத்திரை

காலாவதியான உணவுப் பொருள்கள்மீது போலி முத்திரை

2 mins read
dc70a915-277e-4e2a-ae23-b4e424926ba3
சோதனையில் பெப்சிகோ, நெஸ்லே, கோக்க கோலா, யூனிலீவர் போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்த உணவுப் பொருள்களின்மீது போலி முத்திரைகள் இடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

மும்பை: இந்தியாவின் மும்பை நகரில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் உணவுத் துறை அதிகாரிகள் திடீர்ச் சோதனை நடத்தினர்.

சோதனையில் பெப்சிகோ, நெஸ்லே, கோக்க கோலா, யூனிலீவர் போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்த உணவுப் பொருள்களின்மீது போலி முத்திரைகள் இடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

காலாவதியான உணவுப் பொருள்களில் உள்ள காலாவதித் தேதிகள், ஊட்டச்சத்து விவரங்கள் ஆகியவற்றை மாற்றி, அந்த உணவுகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்த மாபெரும் மோசடி நடந்துள்ளது.

இந்தச் சோதனையில், ஏறக்குறைய 80,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிட்டத்தட்ட 5,000 பெட்டிகளில் லேஸ், குர்குரே, மேகி நூடல்ஸ், தம்ஸ் அப் பானம் போன்ற பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மும்பை அனைத்துலக விமான நிலையத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்தச் சேமிப்புக் கிடங்கை, சாதனா என்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்திவருகிறது.

19 சிறு ஏற்றுமதியாளர்களுக்காக இந்த வேலைகளைச் செய்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக மகாராஷ்டிர மாநிலத்தில் உணவுப் பாதுகாப்புச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

“இந்த மோசடி மிகவும் திட்டமிட்டு, பெரிய அளவில் நடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது,” என்று மகாராஷ்டிர மாநிலத்தின் உணவு, மருந்து நிர்வாகத் துறைத் தலைவர் துக்காராம் முண்டே தெரிவித்துள்ளார்.

எந்த நாடுகளுக்கு இந்தப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படவிருந்தன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.

வேதிப் பொருள்களைப் பயன்படுத்திப் பழைய காலாவதித் தேதிகளை அழித்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் கணினி மூலம் போலித் தேதிகளைப் பதிவு செய்து உணவுப் பொருள்கள்மீது அச்சிடப்பட்டுள்ளன.

வெளிநாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப, ஊட்டச்சத்து விவரங்களில் உள்ள அளவுகளை 10 விழுக்காடு குறைத்தும், கலோரி அளவுகளை மாற்றியமைத்தும் போலி முத்திரைகளை ஒட்டியுள்ளனர்.

இதன் மூலம் பயனீட்டாளர்கள் ஏமாற்றப்படுவதாகக் காவல் துறையினர் வழக்கு ஆவணத்தில் பதிவு செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்