போலி திருமண மையம், இணையத்தளம் நடத்தி ரூ.1.50 கோடி பணம் சுருட்டிய 20 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 1,500 இளையர்களை திருமண ஆசை காட்டி மோசடி செய்துள்ளதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் இந்த மோசடி அரங்கேறியுள்ளது. அங்குள்ள கும்பல் ஒன்று போலி திருமண இணையத்தளம், தகவல் மையம் ஒன்றை நடத்தி பலரை ஏமாற்றுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்தன.
இணையத்தளத்தில் வெளியாகும் அழகான பெண்களின் புகைப்படங்களைப் பார்த்து பல இளையர்கள் மயங்கி உள்ளனர். இந்நிலையில், போலி திருமண மையத்தின் வாடிக்கையாளர் பிரிவிலிருந்து பேசுவதுபோல் சம்பந்தப்பட்ட இளையர்களை தொடர்பு கொண்ட பெண்கள் இளையர்களின் மனதைக் கவரும் வகையில் பேசியுள்ளனர்.
கிட்டத்தட்ட வருங்கால மனைவிபோல் உரிமையுடன் பேசி அப்பெண்கள் விரித்த வலையில் சிக்கிய ஏராளமான இளையர்கள் பலர், பதிவுக் கட்டணம், தகவல் சரிபார்ப்பு கட்டணம், திருமணச் செலவுகள் எனப் பல காரணங்களுக்காகப் பணம் செலுத்தியுள்ளனர்.
பணத்தைச் சுருட்டியகையோடு அந்தப் பெண்கள் தங்களின் தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டதாகத் தெரிகிறது. அதிர்ச்சி அடைந்த பல இளையர்கள் குவாலியர் இதுகுறித்து நகர காவல்துறையில் புகார் அளித்தனர்.
காவல்துறை விசாரணையில் குவாலியர் நகரில் இரு இடங்களில் பெண்கள் பலர் இணைந்து போலி திருமண மையங்களை நடத்தி வந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த மோசடிக் கும்பலின் மூளையாகச் செயல்பட்டு வந்த திலேஷ்வர் என்பவர் தலைமறைவாகி விட்டார். ராகி கௌர், ஷீத்தல், உள்ளிட்ட 20 பெண்கள் கைதாகினர்.
அவர்களிடம் இருந்து போலி சிம் அட்டைகள், கைப்பேசிகள், கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலி நிறுவனங்களின் பெயரில் வங்கியில் ரூ.1.50 கோடி செலுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.


