மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பாக போலிச் செய்திகள்: இந்திய அரசு எச்சரிக்கை

மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பாக போலிச் செய்திகள்: இந்திய அரசு எச்சரிக்கை

1 mins read
085de7a1-7629-4453-a068-26bb5d1dc8b4
இந்திய ஆயுதப் படைகள் தொடர்பாக முன்பு வெளியாகியுள்ள ஓர் அறிக்கை மின்னிலக்க முறையில் மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளதையும் வெளியறவு அமைச்சு அம்பலப்படுத்தி உள்ளது. - படம்: எம்ஈஏ

புதுடெல்லி: மத்திய கிழக்குப் பகுதியில் கடும் மோதல் நிலவி வரும் வேளையில், அது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு போலிச் செய்திகள் பரப்பப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இத்தகைய போலியான கூற்றுகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் சென்றடைவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது ஹோர்முஸ் நீரிணை. இந்த நீரிணை வழியாக கப்பல்கள் செல்ல ஒருபோதும் அனுமதிக்க இயலாது என ஈரான் முன்பு திட்டவட்டமாக அறிவித்திருந்தது. எனினும், பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.

ஹோர்முஸ் நீரிணை வழியே அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டுக் கப்பல்கள் தவிர, மற்ற நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக தனது கப்பல்கள் செல்ல உத்தரவாதமான பாதையை உறுதி செய்ய வேண்டும் என இந்தியா விடுத்த கோரிக்கையை ஈரான் தலைமை மறுத்துவிட்டதாகவும் இது தொடர்பாக இந்தியா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் ஈரான் நிராகரித்துவிட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

இந்நிலையில், இத்தகவல் போலியானது என இந்திய வெளியுறவு அமைச்சின் உண்மை சரிபார்ப்புப் பிரிவு ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்திய ஆயுதப் படைகள் தொடர்பாக முன்பு வெளியாகியுள்ள ஓர் அறிக்கை மின்னிலக்க முறையில் மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளதையும் வெளியறவு அமைச்சு அம்பலப்படுத்தி உள்ளது.

சமூக ஊடகங்களில் போலியான மற்றும் மாற்றியமைக்கப்பட்ட காணொளிகள் குறித்து குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்