வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்டோரை ஏமாற்றிய மோசடிக் கும்பலை டெல்லி காவல்துறை கைதுசெய்தது.
அதிகச் சம்பளத்துடன் துருக்கியிலும் எத்தியோப்பியாவிலும் வேலை வாங்கித் தருவதாக அந்த மோசடி வேலைவாய்ப்பு நிறுவனம் உறுதியளித்ததாகச் சொல்லப்படுகிறது.
இதன் தொடர்பில் சொஹைல் நிஜாம்,33, அஃப்ரோஜ் ஆலம், 32, பர்வேஜ் ஆலம், 42 எனும் மூவர் காவல்துறையிடம் சிக்கினர்.
சொகுசாக வாழ விரும்பிய அவர்கள், 'ஏஆர் என்டர்பிரைசஸ்' எனும் போலி நிறுவனத்தைத் தொடங்கி, இந்த மோசடியில் இறங்கியதாகச் சொல்லப்படுகிறது.
அவர்களிடம் சிக்கி ஏமாந்த 68 இந்தியர்களின் கடப்பிதழ்கள், ஒரு சீன நிறுவனம் வழங்கியது போன்ற போலி வேலை நியமன ஆணைகள், துருக்கிக்கும் எத்தியோப்பியாவிற்குமான போலி விமான மின்பயணச்சீட்டுகள் ஆகியவற்றைக் காவல்துறை கைப்பற்றியது.
தங்களது போலி நிறுவனம் குறித்து சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்த மோசடிக் கும்பல், போலியான இணையத்தளத்தை உருவாக்கி, அதன்வழியாக இல்லாத வேலைகளுக்கு ஆள்கள் தேவை என்று போலியாக விளம்பரம் செய்ததாகக் காவல்துறை விளக்கியது.
அவர்களிடம் ரூ.1 லட்சம் கொடுத்து ஏமாந்த திலாவர் சிங் என்பவர் காவல்துறையில் புகாரளித்ததைத் தொடர்ந்து, அக்கும்பலின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
மோசடிக் கும்பலின் வங்கிக் கணக்கை முடக்கிய காவல்துறை, அதில் ரூ.50-60 லட்சம் இருக்கலாம் என்றும் தெரிவித்தது. அவர்களின் கூட்டாளிகளைப் பிடிக்கவும் காவல்துறை முயன்று வருகிறது.


