தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கியூஆர் குறியீட்டை மாற்றி பெட்ரோல் நிலையங்களில் மோசடி: இருவர் கைது

2 mins read
0936edba-312a-4c67-926c-c1d1cc6b9446
கைது செய்யப்பட்ட ரிங்கு குமார், விபின். - படம்: ஊடகம்

பாக்பட்: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பெட்ரோல் நிலையங்களில் கியூஆர் குறியீட்டை மாற்றி மோசடி செய்த கும்பல் உத்தரப் பிரதேசத்தில் பிடிபட்டு உள்ளது.

அந்த மாநிலத்தின் பாக்பட் மாவட்டத்தில் உள்ள தோகாட் நகரத்தில் பெட்ரோல் நிலையம் ஒன்றில் செப்டம்பர் 23ஆம் தேதி கியூஆர் மோசடியில் ஈடுபட்ட ஆடவர் ஒருவர் பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தொழில்நுட்பத் திறனுடன் மோசடியில் ஈடுபடும் கும்பலைப் பற்றிய விவரம் தெரியவந்தது.

பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் வாகன ஓட்டுநர்கள் அதற்கான கட்டணத்தை கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்திச் செலுத்துவார்கள்.

மோசடிக் கும்பல் இரவுநேரத்தில் யாரும் கவனிக்காத நேரத்தில் பெட்ரோல் நிலையத்தின் அதிகாரத்துவக் குறியீட்டின் மேல் தங்களது வங்கிக் கணக்குடன் தொடர்புடைய கியூஆர் குறியீட்டை மாற்றிவிட்டுச் சென்றுவிடும்.

அதன் பின்னர், எரிபொருள் நிரப்பியவர்கள் செலுத்தும் பணம் அத்தனையும் அந்தக் கும்பலின் வங்கிக் கணக்கிற்குச் சென்றுவிடும்.

இதே பாணியில் விரைவு உணவு நிலையங்களிலும் அந்தக் கும்பல் மோசடியை அரங்கேற்றி உள்ளது.

காவல்துறையிடம் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் இதற்கு முன்னர் விரைவு உணவு விநியோக ஊழியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

எரிபொருள் விற்பனை செய்த கணக்கில் பெட்ரோல் நிலையங்களின் உரிமையாளர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டதால் சிசிடிவி கண்காணிப்புக் கருவியைச் சோதித்தபோது கியூஆர் குறியீட்டுத் தாளை கும்பல் மாற்றி ஒட்டியது அதில் தெரிந்தது.

அதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய வேட்டையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரிங்கு குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விபின் என்பவர் சிக்கினார்.

மேலும் பலர் தேடப்பட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்