திருப்பதியில் தரிசனத்துக்குப் போலி பரிந்துரைக் கடிதம்; பல லட்ச ரூபாய் மோசடி

திருப்பதியில் தரிசனத்துக்குப் போலி பரிந்துரைக் கடிதம்; பல லட்ச ரூபாய் மோசடி

1 mins read
d9e99648-f6d3-42a6-8a7c-d7a29837f206
திருப்பதி ஏழுமலையான் கோவில். - படம்: விக்கிபீடியா
Google News Preferred Icon

திருப்பதி: திருப்பதி கோவில் தரிசனத்திற்காக பரிந்துரைக் கடிதங்களைக் கொடுத்து லட்சக்கணக்கில் மோசடி செய்தவரை ஆந்திர மாநிலக் காவல்துறை தேடி வருகிறது.

திருமலையைச் சேர்ந்தவர் நிம்மல சீனிவாஸ் என்பவர் இடைத்தரகராகச் செயல்பட்டு பல்வேறு வேலைகளைச் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், குண்டூரைச் சேர்ந்த சீனிவாச ரெட்டி என்பவருக்கு நிம்மல சீனிவாஸ் குறித்துத் தெரியவந்தது.

ஜூன் 22ஆம் தேதி தனது உற்றார் உறவினர்கள் என 60 பேர் திருப்பதிக்கு வருகின்றனர் என்றும் அனைவரும் தங்குவதற்கு அறைகள், ஏழுமலையான் தரிசனத்திற்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அவரிடம் சீனிவாச ரெட்டி கேட்டுக்கொண்டார்.

அதையடுத்து, சிறப்புத் தரிசனத்திற்காக 60 பேருக்கும் சேர்த்து ரூ. 3.60 லட்சத்துடன் மற்ற ஏற்பாடுகளுக்குமாகச் சேர்த்து ரூ. 4.22 லட்சத்தைப் பெற்றார் நிம்மல சீனிவாஸ்.

வங்கிக்கணக்கு மூலம் பணப்பரிமாற்றம் நிகழ்ந்தது. ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட நிம்மல சீனிவாஸ் எம்எல்ஏ, எம்பிக்களின் பெயரில் போலிப் பரிந்துரைக் கடிதங்களைக் கொடுத்து ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

இக்கடிதத்தைக் காண்பித்தால் சிறப்புத்தரிசனம் கிடைக்கும் என்று நிம்மல சீனிவாஸ் கூறியதை உண்மையென நம்பி சீனிவாஸ் ரெட்டி உள்ளிட்ட 60 பேரும் திருமலைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு கோவில் நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் கடிதங்களைக் கொடுத்தபோதுதான் அவை போலியானவை எனத் தெரியவந்தது.

ஆவேசமடைந்த 60 பேரும் நிம்மல சீனிவாஸ்மீது காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் பேரில் தலைமறைவான அவர் தேடப்பட்டு வருகிறார்.

குறிப்புச் சொற்கள்