உணவைப் பகிர்ந்தபோது குடும்பத் தகராறு; பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு

உணவைப் பகிர்ந்தபோது குடும்பத் தகராறு; பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு

1 mins read
1aeea299-a339-4beb-bda3-12e01fe9c2d6
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நால்வரை காவல்துறை கைது செய்துள்ளது. - கோப்பு படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லியில் பீட்சாவை பகிர்ந்து உண்ணுவதில் குடும்பத்துக்குள் ஏற்பட்ட தகராறு துப்பாக்கிச்சூட்டில் முடிவடைந்தது.

வடமேற்கு டெல்லியின் வெல்கம் பகுதியில் வசித்து வரும் ஜீஷன் என்பவர் கடந்த புதன்கிழமை (அக்டோபர் 16) தனது குடும்பத்தினர் அனைவருக்கும் பீட்சா உணவு வாங்கி வந்துள்ளார்.

அதனை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளார். தமது தம்பி ஜாவேத்தின் மனைவி சாத்மாவுக்கு பீட்சா கொடுத்தபோது பிரச்சினை ஏற்பட்டது.

ஜீஷனின் மனைவி சாடியாவுக்கும் அவரது தம்பி மனைவி சாத்மாவுக்கும் இடையே ஏற்கெனவே பிரச்சினை இருந்துள்ளது.

அதனால், சாத்மாவுக்கு தமது கணவர் பீட்சா கொடுத்ததற்கு சாடியா எதிர்ப்புத் தெரிவித்தார். அப்போது மூவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

சாடியாவின் சகோதரர்கள் அங்கு வந்ததும் பிரச்சினை பெரிதானது.

ஒருகட்டத்தில் சாடியாவின் சகோதரர்களுள் ஒருவரான முந்தாஹிர் துப்பாக்கியால் சாத்மாவை நோக்கி சுட, அவரது வயிற்றில் தோட்டா பாய்ந்தது.

பலத்த காயமடைந்த அந்தப் பெண், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து சீலாம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சாடியாவின் சகோதரர்கள் நால்வரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்