வெள்ளிக்கிழமை, ஜூன் 12ஆம் தேதி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி ஓராண்டாகியுள்ள நிலையில் மாண்டோரை நினைவுகூர அவர்களின் உற்றார் உறவினர் சம்பவ இடத்தில் கூடினர்.
கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத் நகரிலிருந்து புறப்பட்ட போயிங் 787 ரக விமானம், அருகிலிருந்த மருத்துவக் கல்லூரிமீது மோதி விழுந்து நொறுங்கியது.
அதில் 260 பேர் மாண்டனர். அவர்களில் 241 பேர் விமானத்தில் இருந்தவர்கள். 19 பேர் தரையில் இருந்தவர்கள்.
இந்நிலையில், விபத்து குறித்து இடைக்கால அறிக்கை ஒன்றை இந்திய அதிகாரிகள் அடுத்த சில நாள்களில் வெளியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விபத்து நேர்ந்த இடத்திற்கு வந்த உற்றார் உறவினர்களில் சிலர் மாண்டோரின் புகைப்படங்களைக் கட்டிப்பிடித்தவாறு அழுதனர். வேறுசிலர் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர்.
இவ்வாண்டு ஜூன் 12க்குள் விபத்துக்கான காரணம் குறித்த விளக்கம் அளிக்கப்படும் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், விசாரணை தொடர்வதால் இடைக்கால அறிக்கையை மட்டும் வழங்க முடியும் என்று விமான விபத்து விசாரணைப் பிரிவு குறிப்பிட்டது.
அனைத்துலகச் சட்டத்தின்படி அந்தப் பிரிவு, விபத்துக்குப்பின் ஒரு மாதம் கழித்து முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்த 15 பக்க அறிக்கையில் விமானத்தின் இயந்திரத்துக்குச் செல்லவேண்டிய எரிபொருள் விநியோகம் விபத்து நேர்வதற்குமுன் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டது குறித்து தலைமை விமானிக்கும் துணை விமானிக்கும் இடையே இடம்பெற்ற உரையாடலும் அறிக்கையில் இருந்தது.
எரிபொருள் விசைகள் ஏன் முடக்கப்பட்டன என்பது குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை. அது விமானியின் பிழையா அல்லது விமானத்தின் கோளாறா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. அறிக்கையை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

