பெங்களூரு: பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் சகோதரரும் தெலுங்கு நடிகருமான அமன் பிரீத் சிங் போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் சிக்கியுள்ளார்.
மருத்துவப் பரிசோதனையில் அவர் கொகைன் போதைப்பொருளை உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சாச்சா நேரு பூங்கா அருகே டிசம்பர்19ஆம் தேதியன்று காவல் துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிதின், ஷ்ரானிக் சிங்வி ஆகிய இரு தொழிலதிபர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களுடைய காரை பரிசோதித்தபோது 43.7 கிராம் கொகைன் உள்ளிட்ட 54 கிராம் போதைப்பொருள்கள் சிக்கின.
இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டபோது, நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் அமன் பிரீத் சிங் தங்களின் நீண்டகால வாடிக்கையாளர் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கடந்த 24ஆம் தேதி கைதான ஆப்பிரிக்க குடிமக்கள் இருவரும் அமன் குறித்த தகவலை உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த பல மாதங்களாக போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் அமன் இணையவழி பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதற்கான மின்னிலக்க ஆதாரங்களையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.
இதையடுத்து, அமன் பிரீத் சிங் தலைமறைவாகிவிட்டார். அவருக்கு காவல்துறை வலைவீசியுள்ளது.

