பிரபல தபேலா கலைஞர் ஜாகிர் ஹுசேன் காலமானார்

2 mins read
2c0e829c-1cf5-4191-a432-197255410532
பிரபல தபேலா கலைஞர் ஜாகிர் ஹுசேன் காலமானார். - கோப்புப் படம்: கர்கி முக்கர்ஜி ஃபோர் வீமால்
multi-img1 of 2

புதுடெல்லி: உலகப் புகழ்பெற்ற தபேலா கலைஞரான ஜாகிர் ஹுசேன் காலமானார். அவருக்கு வயது 73.

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 15) அவர் காலமானார். இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜாகிர் ஹுசேன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரது நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினைக்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாகக் குடும்பத்தினர் கூறினர். டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஊடகங்கள் அத்தகவலை வெளியிட்டன.

முன்னணி அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், வர்த்தகர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்டோர் ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் திரு ஹுசேனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என இந்தியாவின் மதிப்புமிகு விருதுகளைப் பெற்ற ஜாகிர் ஹுசேன், கிராமி விருதை நான்கு முறை பெற்ற பெருமைக்குரியவர். கிராமி விருது என்பது இசைத் துறையில் ஆஸ்கார் போன்ற உயரிய விருதாகும்.

தபேலா இசைக் கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்கா கானின் மகனான ஜாகிர் ஹுசேன் 1951ஆம் ஆண்டு பிறந்தார். ஏழு வயதில் முதல் இசைக் கச்சேரியில் பங்கேற்றார்.

“ஆசான், வழிகாட்டி, ஆசிரியராக அவர் ஆற்றிய அபாரப் பணிகள் எண்ணிலடங்கா இசைக் கலைஞர்களிடையே அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த தலைமுறை மேலும் சிறப்பாகச் செய்வதற்கு ஊக்குவிக்க அவர் விரும்பினார். கலைத் தூதராகவும் வரலாற்றில் ஆகச் சிறப்பான இசைக் கலைஞர்களில் ஒருவராகவும் அவர் நிகரற்ற பாரம்பரியத்தை விட்டுச் சென்றிருக்கிறார்,” என்று அவரது குடும்பத்தினர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய மேடைகளில் தனது இசையால் அறியப்பட்ட ஒப்பற்ற கலைஞருக்கு உலகெங்கிருந்தும் மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

குறிப்புச் சொற்கள்