நிலம் விற்ற பணத்தில் ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி

நிலம் விற்ற பணத்தில் ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி

2 mins read
நொய்டாவைச் சேர்ந்த விவசாயிகள் திடீர் பணக்காரர்களாக மாறினர்.
b7b02af9-a5c3-4cf8-b366-814e66e3651f
ஜேவார் பகுதியில் 11,750 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ள புதிய விமான நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையம் ஆகும்.  - படம்: பிக்சாபே

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த விவசாயி சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி உள்ளார்.

நொய்டாவின் ஜேவார் பகுதியில் புதிதாகக் கட்டப்படவுள்ள அனைத்துலக விமான நிலையத்திற்காக சிவம் பிரஜாபதி (26) என்னும் ஆடவர் தனது நிலத்தை அரசாங்கத்திடம் விற்றார்.

அரசாங்கத்திடம் நிலம் வழங்கியதன் மூலம் அவர் ரூ.15 கோடியைப் பெற்றார். அதன்மூலம் அவர் ஹெலிகாப்டரை வாங்கினார்.

ஜேவார் பகுதியில் 11,750 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ள புதிய விமான நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையம் ஆகும்.

புதிய விமான நிலையத்துக்காக நொய்டாவின் ஜேவார் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

ஓர் ஏக்கருக்கு ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நொய்டாவைச் சேர்ந்த விவசாயிகள் திடீர் பணக்காரர்களாக மாறி உள்ளனர்.

பன்வாரி பாஸ் கிராமத்தைச் சேர்ந்த சிவம் பிரஜாபதி தனியார் ஆலையில் தொழிலாளியாக உள்ளார்.

“விமான நிலையத்துக்காக எனது விவசாய நிலத்தை விற்பனை செய்தேன். இதில் எனக்கு ரூ.15 கோடி கிடைத்தது. சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. தற்போது அது நிறைவடைந்துள்ளது,” என்றார்.

நொய்டாவின் பன்வாரி பாஸ் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயி கூறும்போது, “விமான நிலையத்துக்கு நிலம் வழங்கியதால் சில கோடி ரூபாய் கிடைத்தது. இதில் புதிதாக வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறேன். எங்கள் பகுதியைச் சேர்ந்த அனைவருமே திடீர் பணக்காரர்களாகி உள்ளோம். நொய்டா விமான நிலையம் எங்களது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிட்டது” என்றார்.

குறிப்புச் சொற்கள்