பெங்களூரு: விவசாயிகளின் அயராத போராட்டத்தால், விண்வெளிப் பூங்காவுக்காக 1,777 ஏக்கர் விவசாய நிலத்தைக் கையகப்படுத்தும் முடிவைக் கர்நாடக அரசு கைவிட்டுள்ளது.
பெங்களூருவை அடுத்துள்ள தேவனஹள்ளியில் விண்வெளிப் பூங்கா அமைக்க, தேவனஹள்ளியை சுற்றியுள்ள 13 கிராமங்களில் 1,777 ஏக்கர் விவசாய நிலத்தைக் கையகப்படுத்தப்போவதாகக் கர்நாடக அரசு 2021ல் அறிவித்தது.
இதனை எதிர்த்து விவசாய சங்க கூட்டமைப்பினர் 1,198 நாள்களாக உண்ணாவிரதம், சாலை மறியல், பேரணி எனத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். கடந்த 12ஆம் தேதி பெங்களூருவில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து நிலம் கையகப்படுத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
“விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று, விண்வெளிப் பூங்கா அமைப்பதற்காக நிலத்தைக் கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிடுகிறது” என்று முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) செய்தியாளர்களிடம் கூறினார்.
அதேவேளையில் சில விவசாயிகள் தங்களின் நிலத்தைத் தாமாக முன்வந்து வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். அந்த நிலங்களைக் கையகப்படுத்தி, அதனைத் தொழில் வளர்ச்சிக்கு அரசு பயன்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.
விண்வெளிப் பூங்காவில் தங்கள் நிறுவனங்களை அமைக்க விரும்பிய பல தொழிலதிபர்கள் தற்போது அண்டை மாநிலங்களுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் விவசாயிகளின் நலன் கருதி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
“இது 1,198 நாள்களாகப் போராடிய விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி,” என்று பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார்.
“இதற்காகச் சில விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். போராட்டத்தில் பங்கேற்றபோது காவல்துறையினரின் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். சமரசமற்ற போராட்டத்தின் விளைவாகவே இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது,” என்றார் அவர்.