சென்னை : ‘தமிழக அரசு மக்காச்சோளத்திற்கு, 1 விழுக்காடு கூடுதல் வரி விதித்திருப்பது, விவசாயிகளின் உழைப்பை உறிஞ்சும் கொடுஞ்செயல்’ என, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிறு, குறு விவசாயிகள், தங்களிடம் இருக்கும் சிறிய அளவிலான விளைநிலத்தில் பெரும்பாலும் பருவ மழையை நம்பி பயிரிட்டு விளைவிக்கக்கூடிய பயிர் மக்காச்சோளம்.
தமிழகத்தில் விளைவிக்கப்படும் மக்காச்சோளத்தில் 60 விழுக்காடு மதிப்பூட்டப்பட்டு உணவு வகைகள், கால்நடைகள், கோழி தீவனங்கள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன், கரும்பு சக்கைக்கு மாற்றாக எத்தனால் உற்பத்திக்கும் மக்காச்சோளம் பயன்படுகிறது.
தமிழகத்தில் ஆண்டுக்கு 50 லட்சம் டன் மக்காச்சோளம் தேவை என்ற நிலையில், 30 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. எஞ்சியவை ஆந்திரா, கர்நாடகா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது.
இந்நிலையில், மக்காச்சோள உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான உதவிகளை செய்து ஊக்கம் அளித்திருக்க வேண்டும்.
அதைச் செய்யத் தவறியதோடு அதற்கு நேர் மாறாக, சிறிதும் மனச்சாட்சி இன்றி தமிழக அரசு 1 விழுக்காடு கூடுதல் வரியை விதித்திருப்பது எற்றுக்கொள்ள முடியாதது.
விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என நெடுங்காலமாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
அவற்றை கண்டுகொள்ளாத அரசு தற்போது மக்காச்சோளத்திற்கு கூடுதல் வரி விதித்திருப்பது வேளாண்மையை முற்றிலும் அழிப்பதற்கு இட்டுச் செல்லும். எனவே, மக்காச்சோளம் மீதான கூடுதல் வரி விதிப்பை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.