சென்னை: உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையிலும் இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என மத்திய அரசின் தலைமைப் பொருளியல் ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் மாநாடு திங்கட்கிழமை ( ஆகஸ்ட் 4) நடைபெற்றது. இதில் அவர் பேசினார்.
“உலகில் பல நாடுகள் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துவரும் நிலையில், இந்தியா கடந்த ஆண்டில் 7.7 விழுக்காட்டு வளர்ச்சியை அடைந்துள்ளது.
“இது வெறும் அதிர்ஷ்டத்தால் கிடைத்தது அல்ல. உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு பல லட்சம் கோடிகளை முதலீடு செய்ததே முதன்மைக் காரணமாகும்.
“மேற்கு ஆசியாவில் நடைபெற்றுவரும் அமெரிக்கா - ஈரான் இடையிலான போர், உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து பீப்பாய்க்கு 113 டாலர் வரை சென்றது.
“இதனால், இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் உரங்கள் வந்துசேருவதிலும் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் தாயகத்துக்கு அனுப்பும் பண அளவிலும் நிச்சயமற்ற தன்மை நிலவியது. போர் அச்சத்தால் உலகெங்கிலும் உள்ள முதலீடுகள் பாதுகாப்பான நாடுகளை நோக்கி ஓடின.
“ஆனால், போர் அச்சுறுத்தல்களுக்கு இடையிலும் இந்தியப் பொருளாதாரம் எந்தப் பாதிப்பும் இல்லாமல் முன்னேறியது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தது.
“ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலும் 2.1 லட்சம் கோடியைத் தாண்டிச் சாதனை படைத்துள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், “சாலைகள், மின்சார வசதி போல தண்ணீரையும் ஒரு முக்கிய உள்கட்டமைப்பாகக் கருத வேண்டும். 2019ஆம் ஆண்டு சென்னை சந்தித்த தண்ணீர் பஞ்சத்தை மறந்துவிடக் கூடாது,” என்று முனைவர் அனந்த நாகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
“நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டுவதால்தான் மழைக்காலத்தில் வெள்ளமும், கோடையில் வறட்சியும் ஏற்படுகிறது. தண்ணீரை இலவசமாகக் கொடுக்கும்போது, அது அபரிமிதமாக இருப்பதாகக் கருதி மக்கள் அதை வீணாக்குகிறார்கள்.
“இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் ‘வான்சிறப்பு’ அதிகாரத்தில் ‘நீரின்று அமையாது உலகு’ என நீரின் முக்கியத்துவத்தைக் கூறியுள்ளார். அதன்படி, தண்ணீரைச் சேமித்து, அதற்கான சரியான கட்டணத்தை நேர்மையாக வசூலித்து, நிலையான கட்டமைப்பை உருவாக்கினால் மட்டுமே அடுத்த தலைமுறைக்கு நாம் ஒரு பாதுகாப்பான நாட்டை விட்டுச்செல்ல முடியும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

