தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
இந்தியக் குடிமக்களுக்கும் ‘ஓசிஐ’ அட்டைதாரர்களுக்கும் பயனளிக்கும் திட்டம்

விரைவுக் குடிநுழைவு அனுமதி: திருச்சி உள்ளிட்ட மேலும் ஐந்து விமான நிலையங்களுக்கு விரிவாக்கம்

2 mins read
4ac42891-c778-4ec8-b9b7-739d0557818a
இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவுக் குடிநுழைவு - நம்பகமான பயணித் திட்டத்தைக் காணொளி வழியாக மேலும் ஐந்து விமான நிலையங்களில் தொடங்கிவைத்தார். - படம்: பிஐபி
multi-img1 of 3

புதுடெல்லி: முன்னரே சரிபார்க்கப்பட்ட இந்தியக் குடிமக்களும் ‘ஓசிஐ’ அட்டைதாரர்களும் குடிநுழைவு நடைமுறையை விரைந்து நிறைவேற்ற வழிவகை செய்யும் விரைவுக் குடிநுழைவு - நம்பகமான பயணித் திட்டத்தை (FTI-TTP) இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை (செப்டம்பர் 11) மேலும் ஐந்து விமான நிலையங்களில் தொடங்கிவைத்தார்.

கடந்த 2024 ஜூலையில் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தொடங்கப்பட்ட அந்தச் சிறப்புத் திட்டம், அதற்கு இரு மாதங்களுக்குப் பிறகு மும்பை, சென்னை, கோல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, லக்னோ, அமிர்தசரஸ் ஆகிய விமான நிலையங்களிலும் எஃப்டிஐ-டிடிபி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காணொளி வழியாக இடம்பெற்ற அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு அமித்ஷா, வெளிநாடு செல்லும் இந்தியக் குடிமக்களும் ‘ஓசிஐ’ அட்டைதாரர்களும் இத்திட்டத்தின்மூலம் பெரிதும் பயனடைவர் என்று கூறினார்.

இதுவரை ஏறக்குறைய 300,000 பேர் அத்திட்டத்திற்குப் பதிவுசெய்துகொண்டுள்ளதாகவும் 265,000 பேர் அதனைப் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. எஃப்டிஐ-டிடிபி திட்டத்தின்மூலம் விரைவாகக் குடிநுழைவு அனுமதி பெறலாம். இதுவரை ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு மின்வாயில்கள் (e-gates) வழியாக விரைந்து குடிநுழைவு அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எஃப்டிஐ-டிடிபி திட்டமானது, அமெரிக்காவின் அனைத்துலக நுழைவு அனுமதித் திட்டம் போன்றது. அதாவது, முன்அனுமதி பெற்ற, குறைந்த அபாயமுடைய பயணிகளுக்கு விரைந்து குடிநுழைவு அனுமதி வழங்கும் அத்திட்டம் குறிப்பிட்ட சில அமெரிக்க விமான நிலையங்களில் நடைமுறையில் இருப்பதாக அதிகாரி ஒருவர் விளக்கினார். இந்தியாவின் முக்கிய 21 விமான நிலையங்களில் எஃப்டிஐ-டிடிபி திட்டம் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். தகுதிபெறும் பயணிகள், குடிநுழைவு அனுமதி பெற வரிசையில் நிற்காமல் மின்வாயிலைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். அதன்மூலம் அவர்கள் 30 நொடிகளில் குடிநுழைவு நடைமுறையை நிறைவேற்ற இயலும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின்மூலம் பயன்பெற விரும்புவோர் இணையம் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அவர்கள் தங்களது கைவிரல் ரேகை, முகப்படத்துடன் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தேவையான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த எஃப்டிஐ பதிவானது ஐந்தாண்டுகளுக்கு அல்லது கடப்பிதழ் முடியும் காலம் வரை செல்லத்தக்கது.

இத்திட்டம் முதலில் இந்தியக் குடிமக்கள் மற்றும் ஓசிஐ அட்டைதாரர்களுக்கும் பின்னர் வெளிநாட்டவர்களுக்கும் என இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும்.

விரைவுக் குடிநுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க விரும்புவோரும் அதுபற்றி மேல்விவரங்கள் அறிய விரும்புவோரும் www.ftittp.mha.gov.in எனும் இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்