தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகா கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து

2 mins read
df2ec6f7-f391-4ef4-9d7e-de059f30f195
ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 19) கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. - படம்: பிடிஐ

பிரயாக்ராஜ்: இந்தியாவில் நடைபெற்று வரும் உலகின் மிகப்பெரிய இந்து சமய நிகழ்வான மகா கும்பமேளா, உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வின் 6ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 19) கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அங்கு அமைக்கப்பட்ட கூடாரங்களில் இருந்த எரிவாயுக் கலன் வெடித்ததால் தொடர்ந்து பல கூடாரங்களுக்குத் தீ பரவியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு பதற்றநிலை உருவானது.

இந்த விபத்தால் கூடாரங்களில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் பல, எரிந்து சாம்பலாகின. தீ பரவுவதாகத் தகவல் கிடைத்தவுடன் ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

தீவிபத்தால் ஏற்பட்ட கரும்புகை அங்கு பேரளவில் பரவி புகைமூட்டமாகக் காட்சியளித்தது. அந்தப் பகுதியில் உள்ள சாஸ்திரி பாலம், ரயில்வே பாலம் இடையேயுள்ள பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அருகில் உள்ள கூடாரங்களில் வசித்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 20 முதல் 25 கூடாரங்கள் தீக்கிரையாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து வருவதால் தீ மிகவும் வேகமாகப் பரவி வருகிறது.

அப்பகுதியில் இருக்கும் மக்களைக் கட்டுப்படுத்திப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசெல்ல காவல்துறையினரும் பேரிடர் மீட்புப் படையினரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூர் நேரப்படி இரவு 8.43 மணி வரை சேகரிக்கப்பட்ட தகவலின்படி, தீ விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்