தீயிலிருந்து தப்ப எட்டாவது மாடியிலிருந்து குதித்த தந்தை, இரு குழந்தைகள் மரணம்

1 mins read
5d0b77c6-0f84-4a73-88cb-39b43086ea2b
குடியிருப்பின் எட்டு, ஒன்பதாம் மாடிகளில் தீப்பிடித்தது. - படம்: பிடிஐ
multi-img1 of 2

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை தீப்பிடித்தது.

அக்கட்டடத்தின் எட்டாவது மாடியில் வசித்து வந்த ஒரு குடும்பம், தீயிலிருந்து தப்பிப்பதற்காக மேலிருந்து குதித்தது.

அதில், யாஷ் யாதவ், 35, என்ற ஆடவரும் அவருடைய பத்து வயது மகனும் மகளும் உயிரிழந்தனர். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும் அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

யாதவின் மனைவியும் அவருடைய மூத்த மகனும் உயிர்பிழைத்தனர். தீயின் பிடியிலிருந்து தப்பிய அவர்கள் இருவரும் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காலை 9.58 மணியளவில் அக்குடியிருப்பின் எட்டாவது, ஒன்பதாவது மாடிகளில் தீப்பற்றியதாகக் கூறப்பட்டது. தகவலறிந்து 13 தீயணைப்பு வாகனங்களையும் 88 தீயணைப்பு வீரர்களையும் டெல்லி தீயணைப்புத் துறை அவ்விடத்திற்கு அனுப்பிவைத்தது.

தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. மற்ற அனைத்துக் குடியிருப்பாளர்களும் வெளியேற்றப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

பாதுகாப்பு நடவடிக்கையாக, அக்கட்டடத்திற்கான மின்னிணைப்பும் எரிவாயு இணைப்பும் துண்டிக்கப்பட்டன.

தீயணைக்கப்பட்ட பிறகு அக்கட்டடத்தின் உறுதித்தன்மையை மதிப்பிடும்படி டெல்லி வளர்ச்சி ஆணையமும் டெல்லி பெருநகரக் கழகமும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்