சென்னை: அமெரிக்கா- இஸ்ரேல், ஈரான் இடையே நடைபெற்று வரும் போா் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
சில நாள்களாக சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற செய்திகள் பரவி வருகின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் உருவாகியுள்ளது.
இதன் விளைவாக பலர் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடன் பெட்ரோல் நிலையங்களுக்கு வேகமாகச் சென்று பதற்றத்துடன் எரிபொருளை நிரப்பி வருகின்றனர்.
சென்னையின் தி நகர், அண்ணாநகர், மாம்பலம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கியச் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களிலும் வழக்கத்தைவிட அதிகமான கூட்டம் காணப்படுகிறது.
சென்னை தவிர, தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் பெட்ரோல் நிலையங்களில் புதன்கிழமை இரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்காக ஏராளமானோர் தங்களது வாகனத்துடன் வரிசையில் நீண்டநேரம் காத்திருந்தனர்.
பொதுமக்கள் பலரும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் முன்கூட்டியே பெட்ரோல், டீசல் வாங்கி வைத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
அன்றாட வேலைகள், அலுவலகப் பயணம் மற்றும் அவசரத் தேவைகளுக்கு வாகனங்கள் அவசியமாக இருப்பதால் எந்தவிதச் சிக்கலும் ஏற்படாமல் இருக்கவே இப்படி முன்கூட்டியே எரிபொருள் நிரப்பிக் கொள்கிறோம் என்று சிலர் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், “நாடு முழுவதும் 90 நாள்களுக்குப் போதிய அளவுக்கு எரிபொருள் கையிருப்பு இருப்பதால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாது. மக்கள் பீதியடைய வேண்டாம்,” என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி.முரளி தெரிவித்துள்ளார்.
“பீதியுடன் மக்கள் தேவைக்கு அதிகமாக பெட்ரோல், டீசல் வாங்கினால் விரைவில் காலியாகி செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படும்,” என்று அவர் எச்சரித்துள்ளார்.

