புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 7ஆம் தேதி மலேசியா செல்வது உறுதியாகி உள்ளது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், மோடியின் இந்தப் பயணம் ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் மிக முக்கியமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் வாழும் இந்தியச் சமூகத்தினர், வணிகப் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.
மேலும் இப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய-மலேசிய தலைமைச் செயலதிகாரிகள் சந்திப்பு நடக்கும் என்றும் 10வது முறையாக நடைபெறும் இந்தச் சந்திப்பில் நிறைய தொழிலதிபர்கள் பங்கேற்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமும் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது தற்காப்பு, மின்னலக்கத் தொழில்நுட்பம், வணிகம் சார்ந்த அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.
பிரதமர் மோடி மலேசியாவுக்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருதரப்புகளுக்கு இடையேயான உறவு வலுவான நிலையை எட்டிய பிறகு திரு மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியப் பிரதமர் மலேசியா செல்கிறார் என இந்திய வெளியுறவு அமைச்சு கூறி உள்ளது.

