பெருநிறுவனத் தலைவர்களைக் குறிவைக்கும் இணைய மோசடிக் கும்பல்

பெருநிறுவனத் தலைவர்களைக் குறிவைக்கும் இணைய மோசடிக் கும்பல்

1 mins read
76171964-fee1-47ad-a170-e52319211776
இந்த நூதன மோசடியில் இருந்து தற்காத்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்குமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. - படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: பெரு நிறுவனங்களின் தலைவர்கள், மூத்த நிர்வாகிகளைக் குறிவைத்து மோசடிக் கும்பல்கள் செயல்படத் தொடங்கியுள்ளதாக இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் எச்சரித்துள்ளது.

‘பாஸ் ஸ்கேம்’ (Boss Scam) எனக் குறிப்பிடப்படும் இந்த நூதன மோசடியில் இருந்து தற்காத்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்குமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டாளர்கள் போல் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, நிறுவனத் தலைவர்கள், மூத்த நிர்வாகிகளின் மின்னஞ்சல் ‘வாட்ஸ் அப்’ இணைப்பில் தொடர்பு கொள்கின்றனர்.

“பின்னர், சம்பந்தப்பட்ட நிறுவனம் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் நிறுவனத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டு அச்சுறுத்துவர்,” என்று இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் விவரித்துள்ளது.

செயற்கையான, பதற்றச் சூழ்நிலையை உருவாக்கி நிறுவனத் தலைவர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், ஊழியர்களை மோசடியான நிதிப் பரிமாற்றங்களைச் செய்யத் தூண்டுவதாகவும் அம்மையம் கூறியுள்ளது.

இத்தகையச் சூழலைத் தவிர்க்க பெரு நிறுவனங்கள் இணைய மோசடிக்காரர்கள் எளிதில் ஊடுருவ இயலாத வகையில், தங்கள் கணினிக் கட்டமைப்பைத் தொழில்நுட்ப ரீதியில் பலப்படுத்த வேண்டும். அதன் மூலம் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் குறித்த தகவல்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, நிதிப் பரிவர்த்தனைகளுக்கான சரிபார்ப்பு நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் ‘வாட்ஸ் அப்’ செய்திகள் அல்லது மின்னஞ்சல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நிதி மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்றும் இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
இணையக் குற்றம்ஊடுருவல்மோசடிநிறுவனம்தலைவர்நிர்வாகி