தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காதைக் கிழிக்கும் மரண ஓலம், எங்கு திரும்பினாலும் அழுகுரல்கள்

2 mins read
43efa2e7-06d8-4527-a659-f75b6d26d672
ரயில் விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட பயணி ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். படம்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

நொறுங்கிய ரயில் பெட்டிகளுக்கு அடியில் கை, கால் இல்லாத உடல்கள் சிதறிக் கிடந்தன. மரண ஓலம் இரவுப் பொழுது முழுவதும் நீடித்தது.

ஒடிசா ரயில் விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் அளித்துள்ள நேரடி வாக்குமூலம், இந்தியாவையே உலுக்கிய கோர விபத்தின் அளவை எடுத்துக் காட்டியது.

விபத்தை நேரில் கண்டவர்கள் சிலரின் வாக்குமூலம் இதோ:

'பயங்கர சத்தம், நிலம் அதிர்ந்தது'

பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் பயணி விதன் ஜனா, விபத்து நிகழ்ந்தபோது பயங்கர சத்தம் கேட்டதாகச் சொன்னார். நிலம் அதிர்வதை தம்மால் உணர முடிந்ததாகவும் அவர் கூறினார்.

"எங்கள் ரயில் பின்னோக்கி நகர்ந்து நின்றது. நான் வெளியே எட்டிப் பார்த்தபோது, மற்றொரு விரைவு ரயில் மிக வேகமாக சென்றுகொண்டிருந்தது.

"எங்கள் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம்புரண்டு அதற்கு அடியில் மக்கள் சிக்கிக்கொண்டதை நான் கவனித்தேன். இருட்டாக இருந்த அச்சமயத்தில் அழுகுரல்களைக் கேட்க முடிந்தது.

"இறந்தவர்களின் உடல்கள் அங்கும் இங்குமாக கிடந்ததைக் கண்டு அதிர்ந்தேன். அது பார்ப்பதற்கு கொடூரமான காட்சி. என் உடல் அப்படியே மரத்துப்போய்விட்டது," என்றார் ஜனா.

'கை, காலில்லாத உடல்கள் எங்கும் சிதறிக் கிடந்தன'

விபத்தை நேரில் கண்ட மற்றொருவர், கை, காலில்லாத உடல்கள் எங்கும் சிதறிக் கிடந்ததாகக் கூறினார்.

"நிகழ்விடத்துக்கு நாங்கள் விரைந்தோம். கை, காலில்லாத உடல்கள் அங்கும் இங்குமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றோம். தங்கள் உறவினர்களைத் தேடி மக்கள் அலைமோதினர். இச்சம்பவத்தை வர்ணிப்பதற்கே மிகவும் மோசமாக உள்ளது," என்று கண்ணீர் மல்கக் கூறினார் அவர்.

காயமுற்றவர்கள், இறந்தவர்களின் உறவினர்களின் ஓலத்தைக் கேட்டது மனதிற்கு மிகுந்த வேதனை அளித்ததாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மற்றொருவர் சொன்னார்.

"அது மிகவும் மோசமானது. நெஞ்சையே உறைய வைத்தது. அது ஒரு குண்டுவெடிப்புபோல இருந்தது," என்றார் அவர்.

'நான் இறக்கப்போகிறேன் என்று நினைத்தேன்'

ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன், கோல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் விரைவு ரயிலில் இருந்தார்.

கோல்கத்தாவில் பணிபுரியும் அவர், "விபத்து நிகழ்ந்தபோது நான் இறக்கப்போகிறேன் என்று நினைத்தேன். சரக்கு ரயிலைக் கண்டவுடன் ரயில் ஓட்டுநர் பிரேக்கை அழுத்தினார். எனவேதான், நூற்றுக்கணக்கான பயணிகள் உயிர்பிழைத்தனர்," என்றார் அவர்.