பெண் மருத்துவா் கொலை வழக்கு: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பேரணி

2 mins read
fd665dbb-cb4c-44d0-b479-e021f0070eb6
முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தீப்பந்தம் ஏந்தியபடி பேரணியாகச் சென்ற வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள். - படம்: இந்திய ஊடகம்

சிலிகுரி (மேற்கு வங்கம்): கோல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியபடி பேரணியாகச் சென்று தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதற்கிடையே, கோல்கத்தாவில் உள்ள கங்கா கட் பகுதி தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மண் விளக்குகளை ஏற்றி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி நடந்த சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இச்சம்பவம் நாடு தழுவிய மருத்துவா்களின் போராட்டத்துக்கு வழிவகுத்துள்ளது. சம்பவ நாளில் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு கோரியும் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி வேண்டியும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக காவல்துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய், கொலை தொடா்பான ஆதாரங்களைச் சேதப்படுத்தி வழக்குப் பதிய தாமதித்த தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜீத் மோண்டல், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் ஆகிய மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்தச் சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை மேற்கொண்டு வருகிறது. பெண் மருத்துவா் கொலையில் மூவரும் சதியில் ஈடுபட்டாா்களா என்ற கோணத்தில் சிபிஐ புலனாய்வில் ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், பெண் பயிற்சி மருத்துவா் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், இளநிலை மருத்துவர்கள், பயிற்சி மாணவர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியபடி, பதாகைகளைச் சுமந்து கொண்டு பேரணியில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்