பெண் மருத்துவர் கொலை: போராட்டத்தில் தடியடி; கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு

2 mins read
2e250920-18ae-418d-bf54-6a982cf76bab
தலைமை செயலகம் நோக்கி பேரணி சென்ற மாணவர்களைக் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் தடுத்து நிறுத்த காவல்துறையினர் முற்பட்டனர். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

கோல்கத்தா: மேற்குவங்கத் தலைநகரான கோல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் (சிபிஐ) விசாரித்து வரும் நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவ அமைப்புகள் ஆகஸ்ட் 27ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த நான்கு மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

“தலைமைச் செயலகம் நோக்கி நடைபெறும் பேரணியின்போது பெரிய அளவிலான வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தனர். மேலும்,கொலை முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே, பொதுப் பாதுகாப்பு கருதி அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்,” எனக் காவல்துறை கூறியுள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் சென்ற மாணவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஹவுராவின் சந்திரகாச்சி பகுதியில், காவல்துறையினரின் தடுப்பு மீது ஏறி மாணவர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.

அப்போது, காவல்துறையினர்மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசியதால், அங்குப் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து காவல்துறையினர் அவர்கள்மீது தடியடி நடத்தினர். கண்ணீர்ப் புகைக்குண்டு வீசினர். இதனால் அப்பகுதி போர்க்களமாகச் காட்சியளித்தது. 

போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக வந்தவண்ணம் இருந்தனர். அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் ஆங்காங்கே வன்முறை வெடித்தது. மகாத்மா காந்தி சாலையில் போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஹவுரா பாலத்தில் போராட்டக்காரர்கள் சிலரைக் காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் காவல்துறையினர் தாக்கியதைக் கண்டித்து நாளை (ஆகஸ்ட் 28) அம்மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ளது. 

குறிப்புச் சொற்கள்