ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறையின் கண்காணிப்பாளராக முதன்முறையாக சபா ஷால் என்ற பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர், 2012ஆம் ஆண்டு காஷ்மீர் அரசுப் பணிகள் தேர்வாணையத் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார்.
ஜம்மு காஷ்மீர் சிறைத் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் பணியாளர் அதிகாரி, ஜம்மு காஷ்மீர் சிறைகள் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரி ஆகிய பொறுப்புகளை வகித்துள்ள சபா ஷால், தற்போது சிறைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டதை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) அறிவித்தது.
இந்தியாவில் உள்ள பழைமைவாய்ந்த சிறைச்சாலைகளில் ஸ்ரீநகர் சிறையும் ஒன்று. ஏறக்குறைய 900 பேர் இச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பாதுகாப்புமிக்க சிறைகளில் ஒன்றாகக் கருதப்படும ஸ்ரீநகர் மத்திய சிறையில் காவல்துறை மட்டுமின்றி மத்தியத் தொழிலகப் படையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஒருகாலத்தில் வெளிநாட்டுப் பயங்கரவாதிகள், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்தச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர். பிறகு அவர்கள் அனைவரும் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், தமக்கு அளிக்கப்பட்டுள்ள புதிய பொறுப்பில் சபா ஷால் சிறப்பாகச் செயல்படுவார் என உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

