புதுடெல்லி: இந்தியா-பங்ளாதேஷ் எல்லையில் ஏற்படுத்தப்பட்டு உள்ள முள்வேலி இரு நாடுகளுக்கும் இடையில் புதிய பதற்றத்தை எழுப்பி உள்ளது.
ஒருகாலத்தில் தெற்காசியாவின் சிறந்த தோழர்களாக இந்தியாவும் பங்ளாதேஷும் இருந்த நிலை மாறிவிட்டது.
ஜனவரி 6 தொடங்கிய வாரத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மீண்டும் தடுப்பு வேலி அமைக்கும் பணியைத் தொடங்கியது.
இரு நாட்டு எல்லையில் இதுவரை 1,200 மீட்டர் நீளத்துக்கு ஒற்றைக் கம்பிவேலி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த எல்லைப் பகுதி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது.
பங்ளாதேஷில் இருந்து சட்டவிரோதக் குடியேறிகள் நுழைவதையும் எல்லைதாண்டிய குற்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதையும் தடுக்க அந்த வேலியை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை நிறுவி வருகிறது.
முதன்முதலாக, தடுப்பு வேலி அமைக்கும் பணி 2024 ஏப்ரலில் தொடங்கியது. இந்திய அரசாங்கத்துக்கும் பங்ளாதேஷ் பிரதமராக அப்போது இருந்த ஷேக் ஹசினாவுக்கும் இடையில் நிலவிய புரிந்துணர்வின் அடிப்படையில் வேலியை நிறுவும் பணிகள் தொடர்ந்தன.
ஜூன் மாதம் பருவமழைக் காலம் தொடங்கியதும் அந்தப் பணிகளை நிறுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பிஎஸ்எஃப் கூறியது.
பருவநிலை சீரடைந்து, மீண்டும் நவம்பர் மாதம் வேலி அமைக்கும் பணியை இந்தியா தொடங்கியபோது பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இருதரப்பு எல்லை உடன்பாடுகளை இந்தியா மீறுவதாக பங்ளாதேஷ் குற்றம் சாட்டியது. அதேபோல, தடுப்பு வேலி அமைக்கவிடாமல் பங்ளாதேஷ் எல்லைக் காவல் படை குறுக்கீடு செய்வதாக இந்தியா புகார் தெரிவித்தது.
இவ்வாறு ஒன்றையொன்று குறைகூறி வந்ததைத் தொடர்ந்து, பங்ளாதேஷில் உள்ள இந்தியத் தூதர் பிரனாய் வர்மாவை பங்ளாதேஷ் வெளியுறவு அமைச்சு ஜனவரி 12ஆம் தேதி நேரில் அழைத்து, தடுப்பு வேலி தொடர்பான தனது கவலைகளை வெளிப்படுத்தியது.
அதற்குப் பதிலடியாக, மறுநாளே புதுடெல்லியில் உள்ள தற்காலிக பங்ளாதேஷ் தூதர் நூருல் இஸ்லாமை இந்தியாவின் வெளியுறவு அமைச்சு நேரில் வரவழைத்து தடுப்பு வேலி தொடர்பான கருத்துகளைத் தெரிவித்தது.
எல்லையில் நிறுவப்பட்டு வரும் தடுப்பு வேலி இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் புதிய பதற்றத்தை உருவாக்கி வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவித்து உள்ளன.