மகாராஷ்டிரா: மக்கள் ஒரு காலத்தில் மாட்டுவண்டிகளில் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பயணம் மேற்கொண்டதுண்டு.
இயந்திரம் பொருத்தப்பட்ட அதிநவீன வாகனங்கள் புழக்கத்திற்கு வந்த பிறகு மாட்டுவண்டிப் பயணத்தைப் பொதுவாக யாரும் விரும்புவதில்லை.
சொகுசு கார் வைத்திருப்போர் பொதுவாக மாட்டுவண்டிகளைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள்.
ஆனால், அண்மையில் மணலில் சிக்கிக்கொண்ட ‘ஃபெராரி’ கார் ஒன்றுக்கு மாட்டு வண்டிதான் கைகொடுத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ரேவ்தண்டா கிராமத்துக்கு அருகே உள்ள கடற்கரையில் டிசம்பர் 28ஆம் தேதி மணலில் சிக்கிய அந்த சொகுசு காரைக் கயிறு கட்டி மாட்டுவண்டி மூலம் இழுத்து வெளியேற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் பரவிவருகிறது.
காணொளியில், மணலில் சிக்கிய ‘ஃபெராரி’ காரை எருமை மாடு பூட்டிய வண்டியுடன் கயிற்றால் பிணைப்பதையும் மாடு எளிதாக அதை மணற்பகுதிக்கு வெளியே இழுத்துச் செல்வதையும் காணமுடிகிறது.
இச்சம்பவம் தொடர்பில், ஃபெராரி காரை ஓட்டியவர்மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மிருதுவான மணல் நிறைந்த அந்தக் கடற்கரை வாகனங்களை ஓட்டுவதற்கு ஏற்றதன்று எனக் கூறப்படுகிறது.
இணையவாசிகள் மாறுபட்ட கருத்துகளைப் பதிவிடும் வேளையில், சம்பந்தப்பட்டவர்கள் சூழலுக்கு ஏற்ப சிந்தித்து பிரச்சினைக்குத் தீர்வுகண்டதையும் சிலர் பாராட்டியுள்ளனர்.

