புதுடெல்லி: தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் 1.3 ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தால் நிறுவப்பட்ட மாதிரி பதிவு அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.
டெல்லியில், தமிழகத்தைவிட குறைவாக அவ்விகிதம் 1.2 ஆக உள்ளது. கருவுறுதல் விகிதம் என்பது ஒரு பெண் தனது வாழ்நாளில் சராசரியாக பெரும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.
இந்தியாவின் சராசரி கருவுறுதல் விகிதம் 1.9 ஆகக் குறைந்துள்ளது. அந்நாட்டின் மக்கள் தொகையை நிலைத்தன்மையாக வைத்திருக்க இவ்விகிதம் 2.1 ஆக இருக்க வேண்டும்.
இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவில் வரும் காலத்தில் பிறப்பு விகிதம் இறப்பு விகிதத்தைவிட குறைந்து, மக்கள் தொகை குறையும் என அச்சத்தைப் பலதரப்பும் வெளிப்படுத்தி வருகின்றன.
தென் மாநிலங்கள் அனைத்தும் குறைவான கருவுறுதல் விகிதத்தைப் பதிவு செய்துள்ளன. கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் 1.5 ஆக உள்ளது. ஆனால், வடமாநிலங்களில் இந்த விகிதம் அதிகமாக உள்ளது. பீகார் மாநிலத்தின் மொத்த கருவுறுதல் விகிதம் நாட்டிலேயே அதிகபட்சமாக 2.8 ஆக உள்ளது.
உத்தரப் பிரதேசம் 2.6, மத்தியப் பிரேதேசம் 2.4, சத்தீஸ்கர் 2.2 எனக் கருவுறுதல் விகிதம் உள்ளது.
தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் ஒரே அளவிலான கருவுறுதல் விகிதத்தைக் கொண்டுள்ளன. ஆனால் வடமாநிலங்களில் நகர்ப்புற, கிராமப்புறங்களில் பெரும் வேறுபாடு நிலவுகிறது. உதாரணமாக மத்தியப் பிரதேசத்தில் நகர்ப்புறங்களில் 1.8 ஆக உள்ள கருவுறுதல் விகிதம் கிராமப்புறங்களில் 2.6 ஆக உள்ளது. பீகாரில் நகர்ப் புறங்களில் 2.2 ஆகவும், கிராமப்புறங்களில் 2.9 ஆகவும் உள்ள இந்தத் தரவு தென்னிந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு பரவலாக அனைத்து பகுதிகளிலும் பரவி உள்ளதைக் காட்டுகிறது.
1970 முதல் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பெண் கல்வியில் முன்னேற்றம், நகரமயமாதல் ஆகியவற்றால் இந்தியாவின் ஒட்டுமொத்த கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தொகுதி மறுசீரமைப்பு, நிதி ஒதுக்குதல் போன்றவை மக்கள் தொகை அடிப்படையிலேயே நடைபெறும் என்பதால் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறையும் எனத் தென்மாநில முதல்வர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.