மும்பை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தங்கத்திற்கான தேவை வலுவாக இருந்ததால், விற்பனையின் மதிப்பு 15 முதல் 25 விழுக்காடுவரை உயர்ந்ததாக உலகத் தங்க மன்றம் (டபிள்யூஜிசி) தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாத மத்தியில் தங்கத்தின் விலை சரிந்ததால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் விற்பனையும் அதிகரித்தது. தங்க நகைகள் மட்டுமன்றி, தங்கக் கட்டிகள், நாணயங்கள் ஆகியவற்றின் விற்பனையும் சிறப்பாக இருந்ததாக உலகத் தங்க மன்றத்தின் இந்தியப் பிரிவு ஆராய்ச்சித் தலைவர் கவிதா கூறினார்.
மதிப்பின் அடிப்படையில் தங்கத்தின் தேவை ஆண்டுக்கு ஆண்டு 15 முதல் 25 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதேவேளை, விற்பனை அளவு சற்றே அதிகமாக இருந்ததாகச் சில்லறை விற்பனையாளர்கள் குறிப்பிட்டனர்.
பழைய தங்க நகைகளைக் கொடுத்துப் புதிய நகைகள் வாங்கும் நடைமுறை பெரும்பாலும் சீராகவே இருந்தது. பல கடைகளில், மொத்த விற்பனையில் இத்தகைய பரிமாற்றங்கள் 40 முதல் 60 விழுக்காடுவரை பதிவாயின. இருப்பினும், சில கடைகளில் பழைய தங்கத்தை மாற்றிப் புதிய நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் சரிவு காணப்பட்டதாக கவிதா தெரிவித்தார்.
0.5 கிராம் முதல் 5 கிராம் வரையிலான சிறிய எடை கொண்ட தங்கக் கட்டிகள், நாணயங்களே அதிக அளவில் விற்பனையாகின.
செப்டம்பரில் மந்தமாக இருந்த தங்க இறக்குமதி, அக்டோபரில் கணிசமாக மீண்டு ஆறு மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது.
கடந்த 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையான காலகட்டத்தில் தங்க இறக்குமதி 4,736 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. இது, முந்தைய ஆண்டைக் காட்டிலும் ஆறு விழுக்காடு குறைவாகும். மொத்த இறக்குமதி அளவு சுமார் 470 டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
