மோசமான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் தலைவர்களை நீக்க மசோதா: நாடாளுமன்றத்தில் அமளி

2 mins read
5e015e1a-9243-45cf-9cb8-61be6e4692b8
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கிழிந்த தாள்களை அமித்‌ஷா மீது எறிந்ததாகச் செய்தி வெளியானது. - படம்: சன்சாட் டிவி / இந்துஸ்தான் டைம்ஸ்

புதுடெல்லி: மோசமான குற்றச்சாட்டுகளை 30 நாள்களுக்கு எதிர்நோக்கும் பிரதமர்கள், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் ஆகியோரை நீக்க வகைசெய்யும் மசோதாக்கள் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சியினர் கண்டனக் குரல் எழுப்பினர், சிலர் மசோதா ஆவணங்களைக் கிழித்தனர்.

சில எதிர்க்கட்சியினர், உள்துறை அமைச்சர் அமித்‌ஷா மீது கிழிந்த தாள்களை விட்டெறிந்ததாகவும் சில ஊடகங்கள் தெரிவித்தன. அந்தத் தாள்கள், மசோதா ஆவணங்கள் என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அகில இந்திய மஜிலிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் (All India Majlis-e-Ittehadul Muslimeen) கட்சியின் அசாதுதீன் ஒவைசி, காங்கிரஸ் கட்சியின் மனி‌ஷ் திவாரி, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் மசோதாக்களுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர். அவை, நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் அரசாங்க முறைக்கும் எதிரானவை என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

மசோதாக்கள் அவசரமாக வரையப்பட்டவை என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அமித்‌ஷா மறுத்தார். அந்த மசோதாக்கள் கூட்டு நாடாளுமன்றக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். அக்குழுவில் எதிர்க்கட்சியினர் உட்பட நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்தவர்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்கலாம்.

அமித்‌ஷா, குஜராத் மாநில உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது கைது செய்யப்பட்டவர்; அரசியலில் அவர் நியாயமாக நடந்துகொள்வதாகச் சொல்வது குறித்து வேணுகோபால் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூத்த தலைவரான அமித்‌ஷா, கைது செய்யப்படுவதற்கு முன்பு தாம் பதவி விலகியதாகச் சொன்னார். நீதிமன்றம் தம்மை விடுவித்த பிறகே தாம் மீண்டும் அரசாங்கத்தில் சேர்ந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.

“மோசமான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் அதேவேளையில் அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் வெட்கமற்ற செயல் இடம்பெறக்கூடாது,” என்றார் அமித்‌ஷா.

இந்த மசோதாக்களின்படி கைது செய்யப்பட்டு 30 நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்படும் பிரதமர் அல்லது மாநில முதல்வர் 31வது நாள் பதவி விலகவேண்டும். குறைந்தது ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டுகளை எதில்நோக்கும் தலைவர்களுக்கு இது பொருந்தும்.

குறிப்புச் சொற்கள்