இந்தியாவில் தயாராகும் ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

1 mins read
81ec9672-f249-4fc4-90a4-a4835b6d0e99
ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம், இந்திய நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), இந்திய நிறுவனங்களுக்கு அதிகாரபூர்வமாக வழங்கியுள்ளது.

மேம்பட்ட நடுத்தர ஏவுகணை, குறுகிய தூரம் செல்லக்கூடிய ‘பிரளய’ ஏவுகணைக்காக உருவாக்கப்பட்ட முக்கிய உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை இந்தியத் தொழிற்சாலைகளுக்கு டிஆர்டிஓ நிறுவனம் மாற்றியுள்ளது.

அது இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தித் திறனைப் பன்மடங்கு பெருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மேம்பட்ட நடுத்தர ஏவுகணைகளின் வேகமும் கட்டமைப்பும் வலுப்படுத்தப்படும்.

வெளிநாடுகளைச் சார்ந்திராமல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மணிக்கு 2,500 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ஆற்றல்கொண்ட இரட்டைப் பொறிகள் கொண்ட போர் விமானத்தைத் தயாரிக்க டிஆர்டிஓ நிறுவனம் உதவுகிறது.

10 மணி நேரம் விடாமல் பறக்கும் ஆற்றல்கொண்ட அந்த விமானம், தொலைதூரத்தில் உள்ள குறிகளைத் தாக்கும் திறன்கொண்டதாக உள்ளது.

இந்த அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட மேம்பட்ட நடுத்தர ஏவுகணைகள், அமெரிக்காவின் எப்35, சீனப் போர் விமானங்களை மிஞ்சிய செயல்திறனையும் ஆற்றலையும் கொண்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்