பள்ளிகளில் சுகாதார வசதிகள் இன்றி ஐந்து கோடி இந்தியச் சிறார்கள்

பள்ளிகளில் சுகாதார வசதிகள் இன்றி ஐந்து கோடி இந்தியச் சிறார்கள்

கோப்புப் படம்: தி வயர் சைன்ஸ்

29 Sep 2026 - 5:50 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள பள்ளிகளில் ஏறக்குறைய ஐந்து கோடி குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படை சுகாதார வசதிகள் இன்னும் கிடைக்கவில்லை என உலக சுகாதார நிறுவனமும் (WHO), யுனிசெஃப் (UNICEF) அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டுக் கண்காணிப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளன.

‘பள்ளிகளில் குடிநீர், சுகாதாரம், தூய்மை: 2015-2025’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அனைத்துலக ஆய்வறிக்கையின்படி, உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை சுகாதார வசதிகள் இன்றித் தவிக்கும் 24.4 கோடி குழந்தைகளில், ஐந்தில் ஒரு பங்கினர் (ஐந்து கோடி பேர்) இந்தியாவில் வாழ்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்தப் பட்டியலில் நைஜீரியா (3.4 கோடி), எத்தியோப்பியா (2.6 கோடி) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளில், சுகாதார வசதிகள் இல்லாத இந்தியப் பள்ளிகளின் எண்ணிக்கை 14 விழுக்காடு அளவுக்குக் குறைந்துள்ளது என்பது சற்றே ஆறுதல் தரும் தகவல் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அதேபோல், குடிநீர் வசதியைப் பொறுத்தவரையில் இந்தியா சிறப்பான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. 2030க்குள் பள்ளிகளில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் இலக்கை எட்டும் வகையில் செயல்படும் 28 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இருப்பினும், ஏறக்குறைய 1.2 கோடி குழந்தைகள் இன்னமும் பள்ளிகளில் போதிய குடிநீர் வசதியின்றி தவித்து வருவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் சவரக்காரம் (சோப்), தண்ணீர் வகையிலான கைகழுவும் திரவங்கள் (ஹேண்ட் வாஷ்) இல்லாத சூழலில் ஏறக்குறைய இரண்டு கோடி இந்தியக் குழந்தைகள் உள்ளனர்.

எதிர்வரும் 2030க்குள் ‘நிலையான வளர்ச்சி இலக்குகளை’ அடைவதற்கு, உலக நாடுகள் குடிநீர் வசதியை நான்கு மடங்கும் சுகாதார வசதிகளை ஐந்து மடங்கும் கைத்தூய்மை நடவடிக்கைகளை நான்கு மடங்கும் விரைவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

தற்போதைய வேகத்தில் சென்றால், 2030ஆம் ஆண்டிலும்கூட உலகளவில் ஏழு விழுக்காட்டுப் பள்ளிகளில் கழிவறை வசதிகளும் பத்து விழுக்காட்டுப் பள்ளிகளில் குடிநீர் வசதிகளும் இல்லாத நிலையே நீடிக்கும் என மேற்குறிப்பிட்ட ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

குறிப்புச் சொற்கள்
பள்ளிசுகாதாரம்வசதி குறைந்தசிறார்யுனிசெஃப்