தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம்: இந்தியாவுக்கு அமெரிக்கா வலுவான ஆதரவு

2 mins read
830ee1d4-7d6b-43ec-a552-89917d982bb4
ராஜ்நாத் சிங், பீட் ஹெக்செத். - படங்கள்: ஊடகம்

புதுடெல்லி: காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, அமெரிக்கா தனது வலுவான ஆதரவை இந்தியாவுக்கு வழங்கும் என அந்நாடு மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசி மூலம் தாம் பேசியதாகவும் அப்போது, இந்தியாவுடனும் இந்திய மக்களுடனும் அமெரிக்கா உடன் நிற்பதாகத் தாம் தெரிவித்ததாகவும் அமெரிக்க தற்காப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதலையடுத்து இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில், திரு பீட் ஹெக்செத் இந்திய தற்காப்பு அமைச்சருடன் தொடர்புகொண்டு பேசியதாக மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

“தன்னைக் காத்துக்கொள்வதற்கான உரிமை இந்தியாவிற்கு உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு அமெரிக்காவின் உறுதியான ஆதரவுண்டு,” என பீட் ஹெக்செத் கூறியுள்ளார்.

இதற்கிடையே, புதன்கிழமையன்று இந்தி்ய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் தொலைபேசியில் உரையாடி, பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.

அப்போது, இத்தாக்குதலுக்குக் காரணமானவர்கள், ஆதரவாளர்கள், திட்டமிட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

“பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும் என ரூபியோ கூறினார்.

“மேலும், தெற்கு ஆசியாவில் பாதுகாப்பை அதிகரிக்கவும் பதற்றத்தைத் தணிக்கவும் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது,” என்றார் ஜெய்சங்கர்.

இதற்கிடையே, இந்தியாவுக்கு 11 ஆயிரம் கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கி உள்ளது.

இது தொடர்பான ஒப்புதலை அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன்கீழ் செயல்படும் பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு வழங்கியுள்ளது. மேலும், இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவிடம் இருந்து பெறவிருக்கும் புதிய ஆயுதங்கள் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு அதிகரிப்பதுடன், எதிர்காலத்தில் ஏற்படும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள முடியும் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்து உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்