சென்னை: சைதாப்பேட்டைச் சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்தனர்.
முன்னதாக, சென்னை புழல் மத்தியச் சிறையில் இடப்பற்றாக்குறை காரணமாக, அங்கு அடைக்கப்பட்டிருந்த 23 கைதிகள் கடந்த வாரம் சைதாப்பேட்டைக் கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
ஆனால், கிளைச் சிறையில் தங்களுக்குப் போதுமான இடவசதி இல்லை எனக் கூறிய அந்தக் கைதிகள், தங்களை மீண்டும் புழல் மத்தியச் சிறைக்கே மாற்ற வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், அதுதொடர்பாகச் சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
அதனால் ஆத்திரமடைந்த கைதிகள், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) காலை சைதாப்பேட்டைக் கிளைச் சிறையில் சமையல் செய்து கொண்டிருந்த சில கைதிகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது கைதிகளிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டதில் நால்வர் காயமடைந்தனர். சிறைக் காவலர்கள் விரைந்து சென்று இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். காயமடைந்த 4 கைதிகளையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையடுத்து, சிறைத்துறை டிஐஜி பழனி சைதாப்பேட்டைக் கிளைச் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தினார். பின்னர், புழல் மத்தியச் சிறையிலிருந்து மாற்றப்பட்ட 23 கைதிகள், மோதலில் காயமடைந்த 4 கைதிகள் என மொத்தம் 27 பேரையும் புழல் மத்தியச் சிறைக்கு மாற்ற அவர் உத்தரவிட்டார்.
