பாட்னா: பீகார் மாநிலத்தில் மகளிர் வேலை வாய்ப்புத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்மூலம் ஏறக்குறைய 75 லட்சம் பீகார் பெண்களுக்குத் தலா 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நிதியுதவி வழங்கப்படுகிறது.
அவரவர் வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 வரவு வைக்கப்பட்டது. அந்தப் பணத்தைக் கொண்டு, தாங்கள் விரும்பும் சுயதொழிலைத் தொடங்கி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
தொழில் தொடங்குவதற்கு ஆசைப்படும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தயாரிக்கும் பொருள்களை விற்பனை செய்வதற்கான வழிகாட்டி உதவிகளும் செய்து கொடுக்கப்படும்.
சுய தொழில் தொடங்க ஆர்வமில்லாத பெண்கள் அந்த 10,000 ரூபாயை தங்களது பிற வாழ்க்கைச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை அவர்கள் திருப்பிக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளதால், பீகார் மாநிலப் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்களது சிறு தொழிலில் திறம்பட செயல்படும் பெண்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு அடுத்தகட்ட உதவியாக தொழிலை மேம்படுத்திக்கொள்ள ரூ.2 லட்சம் வரை மானிய உதவி வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் உறுதியளித்து உள்ளார்.
75 லட்சம் பெண்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் இந்தத் திட்டத்துக்கு 7,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பீகார் மாநில பெண்களிடம் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அம்மாநில அரசின் சார்பில் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியபோது, “பீகார் மக்களின் முன்னேற்றத்துக்காக நானும் முதல்வர் நிதிஷ் குமாரும் அயராது பாடுபட்டு வருகிறோம்.
“தற்போது தொடங்கப்பட்டு இருக்கும் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் ஏராளமான பெண்கள் மளிகைக் கடைகள், பாத்திரக் கடை, அழகு சாதனப் பொருட்கள் கடைகள், பொம்மைக் கடைகள் உட்பட பல்வேறு சிறிய வணிக நிறுவனங்களைத் தொடங்க உள்ளனர். சிலர் கறவை மாடுகள், மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களில் கால் பதிக்க உள்ளனர்,” என்று பேசினார்.