மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஆண்டு 219,000 நிதி மோசடிச் சம்பவங்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ 388.72 பில்லியன் (6.1 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான நிதி மோசடிச் சம்பவங்கள் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளதாக மாநில உள்துறை அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. அவற்றில் ஆக அதிகமானவை மாநிலத் தலைநகர் மும்பையில் நிகழ்ந்தன என்றும் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் மொத்தம் 51,873 நிதி மோசடிச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.124.04 பில்லியன் என்று ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ போன்ற ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மும்பைக்கு அடுத்த நிலையில் பூனே நகரம் வந்துள்ளது. அந்நகரில் 22,059 நிதி மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றின் மொத்த மிதிப்பு ரூ. 51.2 பில்லியனாகும்.
ஒட்டுமொத்தமாக பூனே மாவட்டத்தில் 42,802 நிதி மோசடிச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அதற்கு அடுத்தபடியாக தானே மாவட்டத்தில் 35,388 நிதி மோசடிச் சம்பவங்கள் நேர்ந்தன.
தானே நகரில் அந்த எண்ணிக்கை 20,892ஆக இருக்கிறது. நாவி மும்பை நகரில் 13,260 சம்பவங்களும் தானே புறநகர்ப் பகுதிகளில் 1,236 சம்பவங்களும் பதிவாயின.
நாக்பூர் நகரில் 11,875 நிதி மோசடிச் சம்பவங்கள் பதிவாயின. நாக்பூர் புறநகர்ப் பகுதிகளில் அந்த எண்ணிக்கை 1,620ஆகப் பதிவானது. இவற்றில் நிகழ்ந்த நிதி மொசடிச் சம்பவங்களின் மொத்த மதிப்பு ரூ. 14.91 பில்லியனாகும்.
நாஷிக் மாவட்டத்தில் 9,169 நிதி மோசடிச் சம்பவங்கள் இடம்பெற்றன. நாஷிக் நகரில் நேர்ந்த 6,381 நிதி மோசடிச் சம்பவங்கள் அவற்றில் அடங்கும். மொத்தமாக, ரூ. 10.47 பில்லியன் மதிப்பிலான மோசடிச் சம்பவங்கள் அவ்விடங்களில் பதிவாயின.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் விழிப்புடன் இருக்குமாறும் சந்தேகத்துக்குரிய நிதிப் பரிவர்த்தனைகளைப் பற்றித் தெரியப்படுத்துமாறும் அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

