திருவனந்தபுரம்: பண முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே இம்மாதம் 17ஆம் தேதி அவரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை (ஜூன் 25) அடுத்தகட்ட விசாரணை நடைபெற்றது.
அதற்காக, கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் வீணா சென்றார்.
இரவு 8 மணியளவில் விசாரணை முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அவர் அந்த அலுவலகத்திலிருந்து வெளியில் வந்தார். கிட்டத்தட்ட 10 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
வீணாவின் கணவரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஏ. முகம்மது ரியாஸ் வியாழக்கிழமை காலையில் விசாரணை அலுவலகத்தில் வீணாவை வாகனத்திலிருந்து இறக்கிவிட்டுச் சென்றதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன. முதற்கட்ட விசாரணையும் 10 மணி நேரம் நீடித்ததாகக் கூறப்பட்டது.
‘கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல்’ (சிஎம்ஆர்எல்) நிறுவனம், வீணாவுக்குச் சொந்தமான ‘எக்ஸாலாஜிக்’ நிறுவனத்துக்கு எந்தவொரு சேவையையும் பெறாமல் ரூ.2.78 கோடி செலுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், சிஎம்ஆர்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்தா என்பவரால் நடத்தப்படும் ‘எம்பவர் இந்தியா கேப்பிட்டல் இன்வெஸ்ட்மென்ட்’ நிறுவனமும் வீணாவின் ‘எக்ஸாலஜிக்’ நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் கடன் அளித்திருந்தது.
இதுதொடர்பாக நிறுவன விவகாரங்கள் அமைச்சின்கீழ் இயங்கும் கடுமையான மோசடிகளை விசாரிக்கும் அலுவலகம், 2025 ஏப்ரல் மாதம் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
அதன் அடிப்படையில், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாகத் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் வங்கிக் கிளையில் வீணாவின் வங்கிப் பெட்டகத்தில், அவர் முன்னிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 17ஆம் தேதி சோதனை நடத்தினர்.

