புதுடெல்லி: இந்திய ரயில்வே இயக்கும் ரயில்களிலும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலைய வளாகங்களிலும் ‘ஸ்பீக்கர் மோடில்’ (Speaker mode) கைப்பேசியைப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பயணிகள் இடையூறின்றி அமைதியான முறையில் பயணம் செய்வதை உறுதி செய்யப் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ரயிலில் உரத்த குரலில் கைப்பேசியில் பேசுவது, ‘ஹெட்ஃபோன்ஸ்’ (Ear phones) இல்லாமல் பாடல்கள் கேட்பது அல்லது காணொளிகளைப் பார்ப்பது போன்ற செயல்கள் பிற பயணிகளுக்குப் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகப் புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக, குளிரூட்டி வசதியுள்ள ரயில் பெட்டிகளில் செல்லும் பயணிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே சட்டத்தின்கீழ், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படும் பயணிகள் ரயிலை விட்டு உடனடியாக இறக்கிவிடப்படுவதுடன், அவர்களுக்கு ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படும்.
இந்த முதல் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து இடையூறு செய்தால், ரூ.5,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை எளிய சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த விதியை மீறுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப் பயணச்சீட்டுப் பரிசோதகர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பயணத்தின்போது இதுபோன்ற இடையூறுகளைச் சந்திக்கும் பயணிகள் ரயில்வே ஊழியர்களிடம் தெரிவிக்கலாம் அல்லது இணையத்தளம் மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் அடிப்படைக் கட்டுப்பாடுகளையும் சக பயணிகளின் அமைதியையும் மதித்துப் பயணிகள் அனைவரும் ‘ஹெட்ஃபோன்’களைப் பயன்படுத்துமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏற்கெனவே சென்னை மெட்ரோ ரயில், பயண ஒழுங்குமுறை விதிகளை மீறி, மற்றவர்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
தற்போது அனைத்து ரயில்களிலும் இந்த விதிமுறை பின்பற்றப்பட உள்ளது.
