விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துக் கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டுமென ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடைகளிலும் உணவு நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப் பலகை அமைத்தல் தொடர்பாக தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் மாவட்டக் கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெற்றது.
அப்போது பேசிய திரு ரகுமான், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடைகள், உணவு நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட விதிகளின்படி தமிழில் வைக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகள் சட்ட விதிகளின்படி அனைத்துத் தொழிற்சாலைகளிலும் மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழில் பெயர்ப் பலகை வைக்கப்பட வேண்டும்.
“நிறுவனங்களின் பெயர்ப் பலகையானது தமிழில் முதன்மையாகவும் பின்னர் ஆங்கிலத்திலும் அதன் பின்னர் அவரவர் விரும்பும் மொழிகளில் அமைக்கப்பட வேண்டும். மே மாதம் 15ஆம் தேதிக்குள் 100 விழுக்காடு தமிழில் பெயர்ப் பலகை வைக்கப்படுவதை உறுதிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.
மே 15ஆம் தேதி இதற்கான இறுதி நாள்.
அதன் பிறகு பெயர்ப் பலகை தமிழில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று ஆட்சியர் கூறினார்.
இதற்கெனச் சிறப்புக் கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி - கல்லூரிகளில் உள்ள பெயர்ப் பலகைகளைத் தமிழில் வைக்க வலியுறுத்தி அம்மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவு பிறப்பித்தது நினைவுகூரத்தக்கது.