போபால்: கெட்ட வார்த்தை பேசினால் அபராதம் அல்லது கட்டாயத் துப்புரவுப் பணி என்ற கிராம பஞ்சாயத்தின் விதிமுறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் பர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ளது போர்சர் கிராமம். இந்தக் கிராமத்தில் சிறுவர்கள் அவ்வப்போது சண்டையிடும்போது பயன்படுத்தும் தகாத வார்த்தைகள் சிலசமயம் பெரும் மோதல்களுக்கு காரணமாகிவிடுகிறது.
இதையடுத்து, தரக்குறைவான வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் அல்லது ஒரு மணி நேரம் கட்டாயத் துப்புரவுப் பணி என்ற உத்தரவை கிராமப் பஞ்சாயத்து பிறப்பித்தது.
இதற்கு பலன் கிடைத்துள்ளதாகவும் கிராம மக்கள் வார்த்தைகளைக் கவனமாகப் பயன்படுத்துவதாகவும் கிராமத் துணைத் தலைவர் வினோத் ஷிண்டே தெரிவித்தார்.
அண்டை கிராமத்தினரும் இந்தப் புதிய நடைமுறையைப் பாராட்டி உள்ளனர் என்றும் மத்தியப் பிரதேசத்தில் இப்படிப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறை என்றும் அஷ்வின் பாட்டீல் என்ற இளையர் கூறியுள்ளார்.
‘வசைமொழி இல்லா கிராமம்’ என்ற முழக்கத்துடன் இந்த இளையர் முன்வைத்த யோசனைதான் தற்போது இக்கிராமத்தில் நடைமுறையில் உள்ளது.
“முன்பு தாய்மார்கள், சகோதரிகளுக்கு எதிராகப் பலர் இழிவான சொற்களை அடிக்கடி பயன்படுத்தினர். இப்போது, அவ்வாறு செய்பவர்கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் அல்லது கிராமத்தில் ஒரு மணி நேரம் துப்புரவுப் பணி செய்ய வேண்டும். இந்த உத்தரவு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது,” என்கிறார் அஷ்வின் பாட்டீல்.

